அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஒரு மனதாக ஏற்கிறோம்: பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டணிக்கட்சி, தொகுதி பங்கீடு முடிவு செய்ய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். எனவே, தேர்தலை நடத்துவதற்கான வேலையில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இத்தகைய அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த மாதம் 20-ந்தேதி ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை:

* அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை ஒரு மனதாக ஏற்கிறோம்.

* கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை முடிவு செய்ய ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு முழு அதிகாரம்.

* கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தெரிவித்து தீர்மானம்.

* ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20% அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

* நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

* இலங்கையில் மகாண சபைகள் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

* நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

* பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

* தமிழகம் முழுவதும்  2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.

Related Stories:

More
>