×

கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலை வைக்க கட்டிய பீடம் இடித்து அகற்றம்: வனத்துறைக்கு பொதுமக்கள் கண்டனம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகள் வைப்பதற்காக எழுப்பப்பட்ட பீடங்களை வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் வழியில் பஸ் நிறுத்தம் அருகே பழையாறு கிராம பொதுமக்கள் சார்பில் பெரியார் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர்களின் சிலை வைப்பதற்காக 3 கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென சீர்காழி தாசில்தார் ஹரிதரன், சீர்காழி பொறுப்பு டிஎஸ்பி சரவணன், சீர்காழி வனச்சரக அலுவலர் குமரேசன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரா,முருகேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை வைப்பதற்காக எழுப்பப்பட்ட 3 சிமெண்ட் கான்கிரீட் சுவர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பழையாறு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழையாறு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகள், எம்ஜிஆர், அண்ணா, இந்திரா காந்தி, காமராஜர் ஆகியோரின் சிலைகள் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சீர்காழி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பஸ் நிறுத்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அதனருகே அனைத்து வகையான கட்டிடங்களும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. ஆனால் தற்பொழுது சிலை வைக்கப்பட உள்ள பீடங்கள் மட்டும் இடித்து அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுகவை சேர்ந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், சிலை வைப்பதற்காக கடந்த 10 தினங்களாக பீடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அதனை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து விட்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இந்த சிமெண்ட் கான்கிரீட் பீடங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார்.கொள்ளிடம் ஒன்றிய திமுக தலைவர் பாண்டுரங்கன் மற்றும் சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழ் சமுதாயத்தை தூக்கிப் பிடித்தவர்கள். தமிழர் நலனுக்காக அரும்பாடுபட்டவர்கள். அவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கான பீடங்கள் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் இடித்து அகற்றி இருப்பது வரம்பு மீறிய செயலாகும். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மூன்று பேரின் சிலைகளையும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Demolition ,village ,Periyar ,Palaiyaru ,Karunanidhi ,Anna ,Kollidam ,forest department , Statue of Periyar, Anna and Karunanidhi in Palaiyaru village near Kollidam Demolition of the pedestal: Public condemnation of the forest department
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...