பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது.

அதற்கு முன்னதாக, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். எனவே, தேர்தலை நடத்துவதற்கான வேலையில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இத்தகைய அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த மாதம் 20-ந்தேதி ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 8.50 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை 8.50 மணிக்கு பதிலாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெறுவதால், கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது  தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

Related Stories:

>