×

கம்பத்தில் காதை கிழிக்குது.... ஹைடெசிபலில் ஒலிக்கும் ஏர்ஹாரன்கள் : வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம்: கம்பத்தில் ஹைடெசிபலில் காதை கிழிக்கும் வகையில் ஏர்ஹாரன்களை ஒலிக்கும் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வாகனங்களில் குறிப்பிட்ட ‘டெசிபல்’ அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் ‘ஏர்ஹாரன்’களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், இந்த வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி, ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றன. குறிப்பாக நகரப்பகுதிக்குள் நுழையும் தனியார் பஸ்கள், அதிக வேகத்தில் செல்வதுடன், தொடர்ச்சியாக ஏர்ஹாரன்களை அலறவிட்டு பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் அச்சமடைகின் றனர். பின்புறமாக வரும் வாகனங்கள் திடீரென ஏர்ஹாரன் உபயோகிப்பதால், டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். எனவே, விதிகளை மீறி காதைக் கிழிக்கும் ஏர்ஹாரன் பயன்படுத்துவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை கூறுகையில், ‘அதிகாரிகளின் சோதனையில் ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு குறைந்த அளவே அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், தனியார் வாகன ஓட்டுனர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, அபராத தொகையை அதிகப்படுத்தினால் ஏர்ஹாரன் பயன்படுத்துவது குறையும்’ என்றார்.



Tags : motorists , Ear piercing on the pole .... Air horns sounding in high decibel : Request for action against motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...