×

அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..! பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாக டிரம்ப் குற்றசாட்டு

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதுடன், அவர் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின. அதன் பின்னர் டிரம்பின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தனது கருத்தை பதிவு செய்தார்.

அதில் ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாகவும், தன்னை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார். கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார். பின்னர், சில நிமிடங்களில் அந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன.


Tags : Donald Trump , President Donald Trump's Twitter account permanently frozen ..! Trump accuses of restricting freedom of speech
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...