×

ஆஸ்திரேலியா 338 ரன் குவிப்பு: முன்னிலை பெறுமா இந்தியா?

சிட்னி: இந்திய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 338 ரன் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியா 2விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் நேற்று முன்தினம் சிட்னியில் தொடங்கியது.  டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில்  2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்தது. மழை காரணமாக முதல் நாளில் 55 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. லாபுஷேன் 67, ஸ்மித் 31 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.  இடையில் மழை குறுக்கிட்டதால் 66வது ஓவருக்கு பிறகு சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் லாபுஷேன் - ஸ்மித் ஜோடி பொறுப்புடன் விளையாடி சேர்த்தது. லாபுஷேன் 91 ரன் (196 பந்து, 11பவுண்டரி) எடுத்து ஜடேஜா சுழலில் ரகானேவிடம் பிடிபட்டார். புகோவ்ஸ்கியுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்ந்த லாபுஷேன்,  ஸ்மித் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கும் 100 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த மேத்யூ வேடு 13, கேமரான் கிரீன் 0, கேப்டன் டிம் பெய்ன் 1, பேட் கம்மின்ஸ் (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய ஸ்மித் சதம் விளாசி இழந்த பார்மை மீட்டார். ஸ்மித் - ஸ்டார்க் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 32 ரன் சேர்த்தனர். ஸ்டார்க் 24 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சைனி வேகத்தில் வெளியேற, லயன் டக் அவுட்டானார். கடைசி வரை தாக்குப்பிடித்த ஸ்மித் 131 ரன் (226 பந்து, 16 பவுண்டரி) விளாசி ரன் அவுட்டானார். அத்துடன் ஆஸி.யின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸி. முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்து ஆல் அவுட்டானது (105.4 ஓவர்). ஹேசல்வுட் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட் அள்ளினார். பூம்ரா, அறிமுகவீரர் சைனி தலா 2, சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 338 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.  ரோகித் சர்மா - ஷுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 27 ஓவரில் 70 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் 26 ரன் (3பவுண்டரி, 1சிக்சர்) எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கில்லுடன் அடுத்து புஜாரா இணைந்தார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த கில் (50 ரன், 101 பந்து, 8 பவுண்டரி) கம்மின்ஸ் வேகத்தில் கிரீன் வசம் பிடிபட்டார். 2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்துள்ளது (45 ஓவர்). புஜாரா 9, ரகானே 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 8 விக்கெட் இருக்க, முதல் இன்னிங்சில் இந்தியா 242 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்ட சவாலை சந்திக்கிறது.

சைனியை முறைத்த ஸ்டார்க்
அறிமுக வீரர் சைனி 102வது ஓவரின் 2வது பந்தை யார்க்கராக வீச முயன்றபோது, அது புல் டாசாக வந்தது. அதை எதிர்க்கொள்ள இருந்த ஸ்டார்க் சட்டென ஒதுங்கியதால் அடிபடுவதில் இருந்து தப்பித்தார். ஸ்டார்க் உடனடியாக சைனியை முறைத்தார். சைனி மன்னிப்பு கேட்க, நடுவர் அதை ‘நோ பால்’ என்று அறிவித்தார். அடுத்த 2 பந்துகளில் ஸ்டார்க் 6, 2 ரன் எடுத்தார். 5வது பந்தையும் சிக்சருக்கு தூக்க, அது மிட் ஆனில் இருந்த கில்லிடம் கேட்ச் ஆனது. ஆட்டமிழந்த ஸ்டார்க் மீண்டும் சைனியை முறைத்தபடியே வெளியேறினார்.




Tags : Australia 338 ,India , Australia 338: Will India take the lead?
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...