×

ஆதரவாளர்கள் வன்முறையால் அமெரிக்காவில் ஆத்திரம் டிரம்ப் பதவியை பறிக்க தீவிர நடவடிக்கை: எஞ்சியுள்ள 11 நாளும் நரகமாகும் என பீதி

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து, ஒட்டு மொத்த அமெரிக்காவும் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக திரண்டுள்ளது. அவரது பதவி இன்னும் 11 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், உடனடியாக அவரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில் ஜனநாயக கட்சி ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி  பெற்றதாக, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், பிடெனின் வெற்றியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அடித்து நொறுக்கினர்போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், 3 பேர் மோதலில் இறந்தனர்.

இந்த சம்பவம் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு தினமாக அமைந்துள்ளது. டிரம்ப் தூண்டியதால்தான் இவ்வளவு பெரிய வன்முறை அரங்கேறி இருப்பதாக தற்போது ஆட்சியை பிடித்துள்ள பிடெனின் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், டிரம்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய அதிபராக பிடென் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளநிலையில், டிரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் 11 நாட்களே எஞ்சியிருக்கிறது. அதுவரை அவரை அதிபர் பதவியில் இருக்க விடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த அமெரிக்காவே தீவிரமாக உள்ளது. அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் படி, 25வது திருத்தத்தினை பயன்படுத்தி அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க, காய் நகர்த்தப்பட்டு வருகிறது.  
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரான நான்சி பெலோசி, டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25வது திருத்தத்தினை அமல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து சபாநாயகர் பெலோசி கூறுகையில், ‘‘இனியும் டிரம்ப் அதிபராக இருந்தால் ஒவ்வொரு நாளும் பயங்கரமானதாக உருமாறக் கூடும். அவர் தேச துரோகத்தை இழைத்து விட்டார். எனவே, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதற்காக 25வது சட்டத்திருத்தத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் பயன்படுத்த வேண்டும். அவர் தவறினால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை நீக்கி விடுவோம்,’’ என எச்சரித்துள்ளார்.
டிரம்ப் பதவியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவர் நீதி விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். ஏற்கனவே வன்முறையால் அதிர்ந்து போய், தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள டிரம்ப், அடுத்த 11 நாளில் என்னென்ன நடக்கப் போகிறதோ என பீதியில் உறைந்து போய் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனநாயகத்தை மதிக்காதவர்
புதிய அதிபர் பிடென் கூறுகையில், ‘‘அவர்களை போராட்டக்காரர்கள் என கூறாதீர்கள். அவர்கள் வன்முறை கும்பல், உள்நாட்டு தீவிரவாதிகள். கடந்த 4 ஆண்டாக ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, அரசியலமைப்பு என எதையுமே மதிக்காத ஒரு அதிபரை நாம் கொண்டிருந்தோம். அதன் விளைவுதான் இந்த வன்முறை வெறியாட்டம்’’ என கூறி உள்ளார்.

கூடாரம் காலியாகிறது
வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, ஆளை விட்டால் போதும் என டிரம்ப்பிடம் இருந்து ஒவ்வொருவராக கழன்று கொண்டு வருகின்றனர். வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று, டிரம்ப் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் எலானி சாவோ, கல்வித்துறை அமைச்சர் பெஸ்டி தேவாஸ் ஆகியோர் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மாட் பொட்டிங்கர், டிரம்ப் மனைவி மெலனியாவின் உதவி அதிகாரி, வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு அமைச்சர் சாரா மாத்யூஸ், வெள்ளை மாளிகை சமூகப் பிரிவு அமைச்சர் ரிக்கி நிசிடா ஆகியோர் பதவி விலகி உள்ளனர். வன்முறையை தடுக்கத் தவறியதற்காக, நாடாளுமன்ற பொறுப்பு போலீஸ் அதிகாரியும் ராஜினாமா செய்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த  போலீஸ் அதிகாரி மரணம்
நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அஷ்லி பாபிட் என்ற பெண் பலியானார். இவர், விமானப்படையில் பணயாற்றியவர். மேலும், ஒரு பெண்ணும் 2 ஆண்களும் மோதலில் ஏற்பட்ட காயங்களால் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய காரணத்தால் படுகாயம் அடைந்த பிரையன் டி சிக்னிக் என்ற போலீஸ் அதிகாரி, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதன் மூலம், இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

எனக்கும்தான் கோபம்
வன்முறையை கண்டித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘எல்லா அமெரிக்கர்களை போலவே நானும் வன்முறை, அராஜகம், கலவரம் ஆகியவற்றை கண்டு கோபப்படுகிறேன். அமெரிக்கா எப்போதும் சட்டம் ஒழுங்கில் சிறந்த நாடாக இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

ராணுவ தலைமை தகவல் அதிகாரியாக திருச்சி நிபுணர் நியமனம்
திருச்சியை சேர்ந்தவர் டாக்டர் ராஜ் ஐயர். துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) 1988 முதல் 1992ம் ஆண்டில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) படித்துள்ளார். பெங்களூருவில் பணி ஆற்றிய அவர், மின் பொறியியல் படிப்பில் பிஎச்டி ஆய்வை முடித்தார். பின்னர், அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றினார். அங்கு அமெரிக்க ராணுவ செயலருக்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். தற்போது, 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள பிடென், இவரை ராணுவத்தின் மிக உயரிய பதவியான தலைமை தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது. இது, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த பதவி 3 நட்சத்திர தளபதி பதவிக்கு ஒப்பானது. இவருக்கு கீழ் 15 ஆயிரம் வீரர்கள் உலகெங்கும் உள்ள 100 நாடுகளில் பணியாற்ற உள்ளனர். இவரது மனைவி பிருந்தா தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழில் நிபுணர் ஆவார்.

Tags : US , Supporters rage in US over violent move to oust Trump: Panic as remaining 11 days go to hell
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...