கொரோனா தடுப்பூசி வழங்குவது பற்றி மாநில முதல்வர்களுடன் 11ல் மோடி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தொடங்குவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் ஆலோசனை நடத்துகிறார்.  இந்தியாவில், ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் ஒத்திகைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசிகள் பொது பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி விநியோகத்தை தொடங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தடுப்பூசியை சேமிப்பதற்கான மையங்கள், அவற்றை கொண்டு செல்லும் போக்குவரத்து வசதி, தடுப்பூசி போடுவதற்காக சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி என அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி வழங்கப்பட்டதும், மாநிலங்கள் செய்ய வேண்டிய பணிகள், அதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து

ஐதராபாத்தை சேர்ந்த பாரத்பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலையின் கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள், இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதை ஒரே ஒரு சொட்டு மூக்கில் செலுத்தினால் போதும். தடுப்பூசியை போட சிரிஞ்சு போன்றவை தேவையில்லை. செலவும் மிகவும் குறைவு. அதோடு, தடுப்பூசி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக தரப்பட வேண்டும். மூக்கு வழி மருந்து ஒரே டோஸ் போதுமானது. இதன் முதற்கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம் பாரத்பயோடெக் விண்ணப்பித்துள்ளது.

Related Stories:

>