×

கடப்பாக்கம் ஏரி தூர்வாரும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு: கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீரை கடப்பாக்கம், கன்னியம்மன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க சென்னை மாநகராட்சி  மழைநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் 55.34 கோடி நிதி உதவி பெற்று அதன் மூலம் கடப்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, சுற்றுப்பாதை மற்றும் சிறுவர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ஏரியை மேம்படுத்தும் திட்டத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஏரியை சுற்றி கான்கிரீட் கரை அமைத்தால் விவசாயத்திற்கு நீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டம் தொடர்பாக மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று கடப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பிரிவு மற்றும் மணலி மண்டல அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், “ஏரியை சுற்றி 1500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆயிரக்கணக்கான கால்நடை ஏரி நீரை நம்பியுள்ளது. சுவர் அமைத்துவிட்டால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறாது. விவசாயத்திற்கு தண்ணீர் வருவது சிரமம் ஆகிவிடும். கால்நடைகள் ஏரிக்குள் இறங்கி தண்ணீர் பருகுவது சிக்கல் ஏற்படும். எனவே விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம். கடைசி ஒரு ஏக்கர் நிலம் இருக்கும் வரை ஏரி நீரை பயன்படுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், “ஏரியை தூர்வாரி கரை அமைப்பதால் விவசாயிகள் நீரை எடுப்பதற்கு எந்த தடையும் இருக்காது.  மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த இடையூறும் ஏற்படாது. அதற்கு தேவையான வசதிகளை நாங்கள் நிச்சயம் செய்வோம்” என்று சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Farmers protest against Kadapakkam lake dredging project
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...