பொங்கல் பண்டிகைக்கு 16,221 பஸ் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை செயலாளர் சமயமூர்த்தி கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து ஆணையர் ஜவகர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் ஆகியோர்களுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக  4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 17ம் தேதி முதல் 19ம் ேததி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  கோயம்பேடு தயார்: மேலும் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க எண்: பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு  ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24’*7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

முன்பதிவு வசதி

முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்

பேருந்து நிலையங்கள்    முன்பதிவு மையங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம்    10

தாம்பரம் சானடோரியம்    2

பூந்தமல்லி பேருந்து நிலையம்    1

மொத்தம்            13

எங்கிருந்து பஸ் ஏறலாம்

* மாதவரம் பேருந்து நிலையம்: ஆந்திரா, திருப்பதி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். ஆந்திரா மார்க்கமாக செல்வோர் மாதவரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும்.

* கே.கே. நகர் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம்.

* தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர்.

* தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம், திருவண்ணாமலை,  போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர்,  சிதம்பரம் செல்லும் பஸ்கள்.

* பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

* கோயம்பேடு : மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  திண்டுக்கல், விருதுநகர்,   திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

Related Stories:

>