சினிமா தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதி வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலால்: தமிழக அரசு நடவடிக்கை : கூடுதல் காட்சிகள் திரையிடலாம்

* கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

* இந்நிலையில், சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.l கொரோனா பரவல் அதிகரிக்கும் என டாக்டர்கள் எதிர்ப்பு.

* அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

* உயர் நீதிமன்ற மதுரை கிளையும்,  தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

சென்னை: சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. மத்திய அரசின் அறிவுரையையும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதையும்  கருத்தில் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளில்  மட்டுமே பார்வையாளர்களை  அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் கூடுதல் காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 4ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பு அளித்தாலும், சுகாதார துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறையில்கூட தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது சர்ச்சைக்குள்ளானது.

தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்களும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முழுவதும் மூடப்பட்டுள்ள அதுவும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் இருந்து படம் பார்ப்பவர்கள், பேசினால் கூட கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லாவும் கடந்த 6ம் தேதி தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு 100 சதவீத இருக்கையுடன் இயங்கலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்து போக செய்யும்விதமாக இருக்கிறது. இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல. திரையரங்குகளை இயக்கும் விவகாரத்தில் ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நேற்று தலைமை செயலகம் வந்தார். தியேட்டர்களுக்கு 100 சதவீத அனுமதி அளித்துள்ளது குறித்தும், இதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில் ரயில், பஸ் போக்குவரத்து, விமான போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100% இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித்திருந்தபோதிலும், சங்கத்தின் கோரிக்கையினை பரிசீலனை செய்து, 100 % இருக்கைகளை பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.  தற்போது, மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டு கொள்ள திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. கொரோனா நோய் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>