×

வருகிற 27ம் தேதி விடுதலையாகும் நிலையில் சசிகலாவை கட்சிக்குள் கட்டுப்படுத்துவது எப்படி?: நாளை நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் முக்கிய ஆலோசனை.!!!

சென்னை: பாஜ, பாமக, தேமுதிக அதிக சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவது மற்றும் சசிகலா இந்த  மாதம் இறுதியில் விடுதலையாகும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை அதிமுக பொதுக்குழு கூடுகிறது.  சசிகலாவை கட்சிக்குள் வராமல் கட்டுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக  விவாதிக்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள்  எடுக்க  இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில்  அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,  வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள், முதல்வர் எடப்பாடி, மக்கள் நீதி மய்ய  தலைவர் கமல் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி மாவட்டம், மாவட்டமாக சென்று  மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவும் இடம் பெற்று  இருந்தது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த 5 தொகுதிகளில் பாஜ தோல்வியடைந்தது.  அதேபோன்று பாமக, தேமுதிக கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.  இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில்  அமைந்த கூட்டணியே தொடரும் என்று அதிமுக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அறிவித்து  வருகிறார்கள்.

ஆனாலும், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற பாமக, பாஜ, தேமுதிக கட்சிகள் அதிமுகவுக்கு  நெருக்கடி கொடுத்து வருகிறது. அதிமுகவுக்கு எதிராக பாஜ அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும்,  மூத்த தலைவர்கள் பேட்டியின் வாயிலாகவும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்,  தமிழக சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையில் தான் கூட்டணி என்று அக்கட்சி தலைவர்கள் பேட்டி  அளித்த சம்பவம் அரங்கேறியது. இது அதிமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு, பதிலடி  கொடுக்கும் வகையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள்  அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அதிரடியாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, சென்னை வந்த பாஜ மூத்த தலைவரும், மத்திய  அமைச்சருமான அமித்ஷாவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஎஸ்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமித்ஷா இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பாஜவுக்கு 60 ெதாகுதிகளை  ஒதுக்க வேண்டும் என்றும், 100 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அதில் 60 தொகுதிகளை எங்களுக்கு  கண்டிப்பாக தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்.

ஆனால், பாஜகவுக்கு 30 இடங்கள் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி உறுதி அளித்துள்ளதாக  கூறப்படுகிறது. சீட் பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டதால், பாஜ சார்பில் 228 தொகுதிக்கு  அமைப்பாளர், பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டனர். இது, அதிமுகவிடம் இருந்து அதிக சீட் கேட்டு  மிரட்வதற்காகவே என்று கூறப்படுகிறது. அதிமுக அதிக சீட் கொடுக்காவிட்டால் தனித்து  போட்டியிடுவோம் என தேமுதிக சூசகமாக தெரிவித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவை மிரட்டும் நோக்கத்துடனே, கடந்த 2 ஆண்டுகளாக எந்த  முன்னேற்றமும் இல்லாமல் இருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் அருளானந்தம்  உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட  அருளானந்தம் அதிமுக அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய விஐபிகளுடன் நெருங்கி புகைப்படம்  எடுத்துள்ளார். மேலும், பலருடன் நெருக்கமான பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரத்தில்  உள்ளவர்களின் வாரிசுகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக அருளானந்தம் சிபிஐயில் வாக்குமூலம் அளித்த  நிலையில் 3 அதிமுக நிர்வாகிகள் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

இதில் மேலும் பல அதிமுக விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் கூட்டணி  அமையும் வரை இந்த வழக்கை வைத்து அதிமுகவை மிரட்ட பாஜ தலைமை திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. அதிமுக-பாஜ கூட்டணி குறித்து தினமும் தலைவர்கள் பேட்டியளித்து வந்த நிலையில்,  கடந்த 3 நாட்களாக யாருமே அதை பற்றி பேசவில்லை. சிபிஐ மற்றும் அதிமுக முக்கிய தலைவர்களின்  நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் வருமானவரித்துறை நடவடிக்கையால் மவுனமாக இருப்பதாக  கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக அதிக சீட் கொடுக்க உடன்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட குறித்து பேச்சு  நடத்தலாம் என பாஜ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 14ம் தேதி அமித்ஷா  சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவிடம் இருந்து  எந்த தெளிவான முடிவும் வராததால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு  பதிலாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன்  தலைமையில் நாளை காலை சென்னை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. இதில், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட  செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க  உள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்த அதிமுக தலைவர்கள் பஸ்  மற்றும் கார்களில் சென்னை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  விரைவில் வர உள்ளது. பாஜ, பாமக, தேமுதிக அதிக சீட்களை கேட்டு மிரட்டி வருகின்றன.

அதேநேரத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் சிறைக்கு சென்றதால்  பொதுக்குழுவால் பதவி நீக்கப்பட்ட சசிகலா இந்த மாதம் 27ம் தேதி விடுதலையாவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் கட்சியில்  அவரை முழுமையாக வர விடாமல் தடுப்பது, அவரை கட்டுப்படுத்துவது குறித்தும் பொதுக்குழுவில்  முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கூட்டத்தில் அதிக சீட் கேட்டு மிரட்டி வரும் பாஜவுடன் கூட்டணி வைப்பதா?  வேண்டாமா?, கூட்டணி வேண்டாம் என்றால் தற்போது பாஜ கையில் எடுத்துள்ள பொள்ளாச்சி வழக்கு  மற்றும் அடுத்து அவர்கள் தயாராக வைத்துள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விவகாரத்தை எப்படி  கையாள்வது, பாமக, தேமுதிகவும் அதிக சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதை சமாளிப்பது எப்படி,  குறிப்பாக பாமக துணை முதல்வர் கேட்டு வருவது குறித்தும், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது  குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி  பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டு  குழுவுக்கு என்னென்ன அதிகாரம் அளிப்பது, வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் அதிமுக கூட்டணியில்  எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது மற்றும் அந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட வேண்டும் என்பது  குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை  ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.  இதுதவிர மேலும் 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

நாளை நடைபெறும் பொதுக்குழுவை கூட்டுவதில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள்  கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பார்கள். முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி  விட்டாலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் இன்னும் தேர்தல் பிரசாரத்தை  தொடங்கவில்லை. இதுபற்றியும் பொதுக்குழுவில் பேசும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை  வெளிப்படையாக தெரிவிப்பார்கள்.

இதனால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழு  கூட்டத்திற்கு பிறகு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிமுக  தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் நாளை நடைபெறும்  பொதுக்குழு கூட்டத்தை அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடன்  கூட்டணி வைத்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பாமகவும் அவசர ஆலோசனை

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக குறைந்தபட்சம் 40 சீட்கள், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட சில  உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு என்பதே  இல்லை என அதிமுக திட்டவட்டமாக கூறி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் தொடரலாமா  அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து முடிவு எடுக்க பாமக அவசர பொதுக்குழு நாளை  கூடுகிறது. இதில், பாமக எடுக்க போகும் முடிவை பொறுத்துதான் அதிமுக கூட்டணி நிலைக்குமா என  தெரியவரும். துணை முதல்வர் வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருப்பதால், பாமக சார்பில் நாளை  நடைபெறும் கூட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Tags : party ,event ,Sasikala ,release , How to control Sasikala within the party in the event of his release on the 27th?
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...