அங்கன்வாடி ஊழியர் பலாத்கார கொலை வழக்கு: தலைமறைவான கோயில் பூசாரி நள்ளிரவில் கைது...உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அங்கன்வாடி ஊழியர் பலாத்கார கொாலை வழக்கில் தலைமறைவான கோயில் பூசாரியை நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  உத்தரபிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி பணியாளர் ஒருவர் அங்குள்ள ஆசிரமத்தை ஒட்டியுள்ள கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். ஆனால் அவர், பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் மகள் ஆகியோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் புகார் மனுவை பெற்றுக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே அடுத்த நாள் காலை 3 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு அவரின் வீட்டுக்கு முன்வந்து போட்டது.

 

அப்போது அவர்கள், கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகவும், தாங்கள் மீட்டு கொண்டு வந்ததாக கூறி நாடகமாடினர். உடலில் ரத்த காயங்களுடன் கிடந்த மனைவியை பார்த்து பதறிப்போன கணவர், மருத்துவமனை கொண்டு செல்லுமாறு மேற்கண்ட 3 பேரிடமும் கெஞ்சினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் இறந்த அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், அவர் பலியானதாக தெரியவந்தது.

கோயிலுக்கு வந்த பெண்ணை கோயிலின் பூசாரியான சத்திய நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜஸ்பால், வேத்ராம் ஆகிய 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்துள்ளனர். ஒருநாள் முழுக்கவே அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த அந்த கும்பல், அவரின் பிறப்புறுப்பை சிதைத்தும், விலா எலும்புகளை உடைத்தும் கொடூரமாக துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து கோயிலின் பூசாரி மற்றும் அவரின் கூட்டாளிகள் என 3 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையம் விசாரித்து வரும்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, உகைதி காவல் நிலைய ஆய்வாளர்  ராகவேந்திர பிரதாப் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கோயில் பூசாரி சத்திய நாராயணனின் கூட்டாளிகளான ஐஸ்பால், வேத்ராம் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து பூசாரி சத்திய நாராயணன், பக்கத்து கிராமத்தில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து அவனை நேற்றிரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>