×

‘உயிருக்கு ஆபத்து, கூலிப்படை எந்த நேரமும் தாக்கலாம்’: ஒடிசா முதல்வருக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு..!!

புவனேஸ்வர்:ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு எதிராக கொலை மிரட்டல் கடிதம் வந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பாஜக பிரமுகர்கள் இருவர் கொலை வழக்கில், இவரது அமைச்சரவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனால், அமைச்சரை பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் பெயரில் முதல்வர் அலுவலகத்திற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. முழுமையான ஆங்கிலத்தில் முகவரி இல்லாமல் இருந்த கடிதத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஒப்பந்த கொலையாளிகள் எந்த நேரத்திலும் தாக்கலாம். அவர்கள் முதல்வரை பின் தொடர்கிறார்கள். தயவுசெய்து இதுகுறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏ.கே 47 மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறி சில கார்களின் எண்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையடுத்து கடிதம் குறித்து உயர் போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள நிலையில், நவீன் பட்நாயக்கின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘முதல்வர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முகவரிக்கு கடிதம் வந்துள்ளது. ஆங்கில மொழியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முதல்வருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்ல சதித்திட்டத்தின் சூத்திரதாரி நாக்பூரில் (மகாராஷ்டிரா) வசிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்த 5ம் தேதி முதல்வரின் முகாம் இல்லத்தில் பெறப்பட்டது. இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறப்பு செயலாளர் (உள்துறை) சந்தோஷ் பாலா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இல்லம், தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

Tags : mercenaries ,Chief Minister ,Odisha , Mercenary, Odisha, agitation
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி