வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு பிடிவாதம்... வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என விவசாயிகள் போர்க்கொடி!!

புதுடெல்லி: மத்திய அரசின் பிடிவாதத்தால் 8ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியை நோக்கி நகர்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது.விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த 4ம் தேதி நடந்த 7வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனவே டெல்லி விஜியன் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான குழுவினர், 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 8ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்பு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்திருந்தார். ஆனால் 8ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலத்திற்கு மட்டும் அல்ல என்றும் வேளாண் சட்டங்கள் ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஆனது என்றும் தெரிவித்துள்ளார். விவசாய பிரதிநிதிகள்- மத்திய அமைச்சர்கள் இடையே முட்டுக்கட்டை நீடிப்பதால் 8ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியை நோக்கி நகர்கிறது.

இதனிடையே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள விவசாய பிரதிநிதிகள் மேஜையில் எழுதிவைத்துள்ள வாசகத்தால் பரபரப்பு எழுந்துள்ளது.தங்கள் மேஜைகளில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்று எழுதப்பட்ட அட்டைகளை வைத்துள்ளனர்.

Related Stories:

>