பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கு விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சியில் சமூக விரோதக் கும்பல் பெண்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தமிழகத்தை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இத்தகைய குற்றங்களில் ஆளும் கட்சியின் செல்வாக்கு படைத்தவர்களும், பொறுப்புகளில் உள்ளவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாரட்சமின்றி கைது செய்ய தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இந்தநிலையில் இவ்வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆளும் அதிமுக கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஆளும் கட்சியினருக்கு நேரடியாக தொடர்புள்ளது என பலரும் முன்வைத்த  குற்றச்சாட்டு உண்மை எனவும் நிரூபணமாகியுள்ளதோடு, இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது.

எனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>