×

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை திட்டம் ‘அம்பேல்’...! போக்குவரத்து நெருக்கடியால் நகரமே ஸ்தம்பிப்பு

சங்கரன்கோவில்: கோயில் நகரமான சங்கரன் கோவிலில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச் சாலை பணிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு நகரமே ஸ்தம்பிக்கிறது. இதனால் தினம், தினம் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வளர்ந்து வரும் நகரமாகும். முதல் நிலை நகராட்சியாக திகழும் இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசித்து  வருகின்றனர். மேலும் தென்தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலமாக விளங்குவதால் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். முக்கிய  திருவிழா நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் வருவதால்  சங்கரன்கோவில் நகரில் தற்போது நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.286 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் ராஜபாளையம்- சங்கரன்கோவில்- திருநெல்வேலி சாலை விரிவாக்கப் பணிகள் ராஜபாளையத்தில் இருந்து 28 கிமீ தூரமும்,  சங்கரன்கோவில் நகர பகுதியில் சுமார் 5.8 கிமீ தவிர்த்து அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் எல்லை பகுதியில் இருந்து சுமார் 49 கிலோ மீட்டர் தூரமும் சாலை விரிவாக்கப்பணிகள் முடிக்கப்பட்டு தற்போது  பயன்பாட்டில் உள்ளது.

சங்கரன்கோவில் நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு மாறாக சங்கரன்கோவிலுக்கு வடக்கே உள்ள புளியம்பட்டி அருகில் இருந்து சங்கரன்கோவிலுக்கு தெற்கே சுமார் 1 கிமீ தூரம் வரை 7.2  கிமீ தூரம் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. வேகமாக துவங்கிய  இந்தப் பணிகள் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் பார்வையிட்டு மீண்டும் அளவீடு செய்யும் பணி துவங்கி நிறுத்தப்பட்டது. இதனால் புறவழிச்சாலை வரும் என நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி சாலை விரிவாக்கம் முடிந்து விட்ட நிலையிலும், சங்கரன்கோவில் நகர் பகுதியில் சாலை விரிவாக்கபணிகள் மேற்கொள்ளாததாலும், புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளதாலும் நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் வரும் அனைத்து வாகனங்கள் 40 நிமிடத்திலும்,    ராஜபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள்  25 நிமிடத்திலும் சங்கரன்கோவில் வரும்  நிலையில், சங்கரன்கோவிலுக்கு உள்ளே வந்து ஊரை கடந்து வெளியே செல்ல போக்குவரத்து நெருக்கடியால் சுமார் 45 நிமிடங்கள் ஆகும் நிலை உள்ளது.

சங்கரன்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத  ஒன்றாக மாறியுள்ள நிலையில் சங்கரன்கோவில் நகர் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகி வரும் சூழ்நிலை  உள்ளது. கொரோனா ஊரடங்கிலிருந்து  அனைவரும் இருசக்கர வாகனங்கள்  பயன்படுத்தும் சூழ்நிலை வந்ததால் தற்போது சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனங்களும் அதிகரித்து விட்டது. இதனால் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி  அதிகரித்துள்ளது. போலீசார் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாமல்  திணறி வருகின்றனர். சங்கரன்கோவில் புறவழிச்சாலை திட்டம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது, தற்போது  பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு மட்டும் நடத்தி முடித்த நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் உடனே  தலையிட்டு கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை  துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். சங்கரன்கோவில் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sankarankoil ,Ambel ,city ,traffic crisis ,standstill , Sankarankoil bypass project 'Ambel' ...! The city itself is at a standstill due to the traffic crisis
× RELATED தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர்...