×

நான் திறந்து வைத்தது வி.கே.என். என்ற தொழிலதிபரின் சிலை அல்ல; முத்தமிழறிஞர் கலைஞரின் ஒரு பக்தரின் சிலை: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வி.கே.என். என்ற தொழிலதிபரின் சிலை அல்ல; முத்தமிழறிஞர் கலைஞரின் ஒரு பக்தரின் சிலை எனவும், எதையும் எதிர்பாராமல் கழகத்துக்காக உழைத்த ஒரு மாபெரும் தொண்டனின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். வள்ளல் வி.கே.என். கண்ணப்பன் அவர்களது சிலையைத் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற வள்ளல் வி.கே.என்.கண்ணப்பன் அவர்களுடைய சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று, அவரது வெண்கல திருவுருவச் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றினார்.





தி.மு.க. என்ற மூன்றெழுத்துக்குக் கிடைத்த சொத்துதான் வி.கே.என். என்ற மூன்றெழுத்து. வி.கே.என். என்ற சொல்லையும் அய்யா கண்ணப்பன் அவர்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அந்தளவுக்கு வி.கே.என். - என்பதையும் தி.மு.க.வையும் பிரிக்க முடியாது. அந்தளவுக்கு கழகத்தோடு ரத்தமும் சதையுமாக இணைந்து கொண்டவர் தான் வி.கே.என். கண்ணப்பன் அவர்கள்.

 அவரது சிலை, அவர் பிறந்த கண்டரமாணிக்கத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிலையாக வைப்பதற்கு எல்லாத் தகுதியும் படைத்தவர் தான் நம்முடைய கண்ணப்பன் அவர்கள்.

 கடந்த 2017-ஆம் ஆண்டு அவர் மறைந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக திருச்சி வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். தலைவர் கலைஞர் அவர்கள் முதுமை காரணமாக இல்லத்தில் ஓய்வெடுத்து வந்ததால் அவரால் வர இயலவில்லை.

அவரும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உடனடியாக வந்திருப்பார். அந்தளவுக்கு தலைவர் கலைஞரோடும் கழகத்தோடும் நகமும் சதையுமாக பிணைந்து அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் கண்ணப்பன் அவர்கள்.

 பொதுவாக தொழில் அதிபர்கள், அரசியலில் ஆர்வம் காட்ட  மாட்டார்கள். அப்படியே ஆர்வம் உடையவர்களாக இருந்தாலும் வெளிப்படையாக அடையாளம் காட்ட மாட்டார்கள். சில தொழிலதிபர்கள், ஆட்சிகள் மாறும் போது மாறிவிடுவார்கள். ஆனால் நிறம் மாறாத, ஒரே தலைமையை ஏற்று அதில் உறுதியாக இருந்த தொழிலதிபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் முக்கியமானவர் வி.கே.என். கண்ணப்பன் அவர்கள்.

 கழகத்தின் மீதான பற்றையோ, தலைவர் கலைஞர் மீதான பாசத்தையோ, அவர் என்றும் மறைத்தது இல்லை.

அதனால் தான் கழகத்தின் சார்பில் சிலை அமைக்கப்படுகிறது. உழைப்பால் உயர்ந்த உத்தம மனிதர்கள் வரிசையில் வி.கே.என். கண்ணப்பன் அவர்கள் இடம் பெறுவார்கள்.

 கண்டரமாணிக்கம் என்ற சிற்றூரில் பிறந்த கண்ணப்பன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிக்கிறார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது கல்விக்கான பல்கலைக் கழகம் மட்டுமல்ல, கழகத்துக்கான பல்கலைக் கழகம்! திராவிட இயக்கத்துக்கான பல்கலைக் கழகம்! திராவிட இயக்கத்தின் தொட்டில் என்று சொல்லக் கூடிய பல்கலைக் கழகம்! இங்கே உருவானவர் தான் வி.கே.என்.கண்ணப்பன் அவர்கள்.

 படித்து முடித்ததும் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தான் பெரும்பாலான இளைஞர்கள் தேடுவார்கள். ஆனால் சுயமாக சம்பாதித்து முன்னேற வேண்டும் என்று தொழில் தொடங்குகிறார் கண்ணப்பன்.

தனக்கு அறிமுகமான வள்ளியப்பன் என்பவரிடம் பண உதவி பெற்று ஒரு ஒர்க் ஷாப் ஆரம்பிக்கிறார். முதலில் எட்டு பேர் அவரிடம் வேலை பார்க்கிறார்கள்.  எட்டுப் பேருடன் தொழில் தொடங்கிய அவரது நிறுவனம் தான் இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விரிந்து பல்லாயிரம் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

தி ருச்சி பெல் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம், கடினமான வேலைகளை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செய்து கொடுத்துள்ளார்.

இந்த மாதிரி தொழில்களில் எந்தளவுக்கு போட்டி இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் எல்லாப் போட்டிகளையும் வென்று பெல் நிறுவனத்துக்கு அதிகமான உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களில் தனது நிறுவனத்தை முதல் நிறுவனமாக மாற்றிக் காட்டியவர் கண்ணப்பன் அவர்கள்.

திருச்சி பெல் நிறுவனத்துக்கு உதிரி பாகம் தயாரித்து தருபவை 419 நிறுவனங்கள் என்றும், அதில் சாதனை புரிந்தவை 19 நிறுவனங்கள் என்றும், அதில் முதலாவது வி.கே.என். நிறுவனம் என்றும் பரிசு பெற்றார் என்றால் இவரது தொழில் திறமைக்கு வேறு சான்று தேவையில்லை. மின்சாரம் இருக்கும் வரை பெல் நிறுவனம் இருக்கும்! பெல் நிறுவனம் இருக்கும் வரை வி.கே.என். இருக்கும்! வி.கே.என். இருக்கும் வரை சமூகப்பணியும் இருக்கும் என்று கம்பீரமாக பேட்டி அளித்தார் என்றால் அது அவரது தன்னம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது.

பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவரல்ல வி.கே.என். அவர்கள். “நான் எந்தளவுக்கு பணம் சம்பாதித்தேன் என்பதை விட எந்தளவுக்கு உதவி செய்தேன் என்பது தான் முக்கியம் என்று சொன்னவர் வி.கே.என்.

அனைத்து ஆன்மிக தலங்களிலும் இலவச விடுதிகளைக் கட்டிக் கொடுத்திருந்தார்கள். தனது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகளை, மகிழ்ச்சியோடு வைத்திருந்தார். அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். திருமண உதவிகள், பள்ளி- கல்லூரி கட்டண உதவிகள் செய்தார். தொழிலாளிகளைப் பார்த்து, நீங்களே முதலாளிகளாக உங்களை நினைத்து முடிவெடுத்து செயல்படுங்கள் என்று சொன்னார்.  அவர்களைத் தொழிலாளிகளாக இல்லாமல், கடவுளாகப் பார்த்தார். தொழிற்சாலைகள் தான் எனக்கு கோவில், இயந்திரங்கள் தான் மூலஸ்தானம்! தொழிலாளர்கள் தான் உற்சவ மூர்த்திகள் என்று சொன்ன தொழில் அதிபர் அவர்.

அப்படிபட்ட வி.கே.என். பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எங்களிடம் குறிப்பிடுவார்கள்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்துக்கு தொண்டாற்றுபவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிடுவார்கள். அவர் நினைத்திருந்தால், விரும்பி இருந்தால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி இருக்கலாம். ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகள் அவருக்கு இருந்தது இல்லை.

தனது தொழில் வளர்ச்சி மூலமாக கழகத்துக்கு எத்தகைய உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தகைய உதவிகளைச் செய்தார்கள். அவருக்கு பிடித்த நிறம் நீலம் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கே திரும்பினாலும் அவரது நிறுவனம், கட்டடங்கள் நீலமாகத் தான் இருக்கும். அதில் தனது அரசியல் நிறம் என்ன என்பதை மறைக்காமல் கருப்பு சிவப்பையும் அடித்து வைத்திருப்பார். உதயசூரியன் நடுவில் தகதகக்கும்.

 நீல வானத்தில் உதயசூரியன் உதயமாவதைப் போல, கழகத்துக்கு கிடைத்த அபூர்வ நட்சத்திரம் தான் விகேஎன் கண்ணப்பன் அவர்கள்.

அவரது மறைவு என்பது தனிப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு இலட்சக்கணக்கான கழகத் தொண்டர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

 அவரது வெற்றிக்குப் பின்னால், உழைப்புக்குப் பின்னால், சமூக நோக்கத்துக்குப் பின்னால், அவரது வாழ்க்கைத் துணைவியாரும் மகன்களும் இருந்துள்ளார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். அவர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இன்று நான் திறந்துள்ள சிலை என்பது வி.கே.என். என்ற தொழில் அதிபரின் சிலை அல்ல! முத்தமிழறிஞர் கலைஞரின் ஒரு பக்தரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்பாராமல் கழகத்துக்காக உழைத்த ஒரு மாபெரும் தொண்டனின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : VKN ,businessman ,devotee ,artist ,MK Stalin ,Muthamizhari , VKN , kalaiangar statue, stalin
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்