×

நீலகிரியில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கிறது: கலெக்டர் பேட்டி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு  நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர்  தெரிவித்தார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கேரளா  மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில்  தடுப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிற பகுதிகளிலிருந்து கோழிகள் மற்றும் அதன்  தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் ஏற்றிவருவதை தீவிர கண்காணிக்க கக்கனல்லா,  நம்பியார் குன்னு, சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் ஆகிய 8 சோதனைச்சாவடியில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் கோழி, வாத்து,  வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும். மனிதரையும் தாக்கவல்லது,  நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்குவரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய்  நமது நாட்டில் நுழைய வாய்ப்பு உள்ளது. பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.   வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி போன்ற பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள்  நுழையவிடக்கூடாது. பண்ணை உபகரணங்களுக்கு மாதம் இருமுறை கிருமி நாசினி  கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள்  இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும். மாநில எல்லை சோதனைசாவடிகளில் ஆய்வு:  கேரளாவை ஒட்டிய தமிழக எல்லை நாடுகானி, சேரம்பாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் மற்றும் கர்நாடக எல்லை கக்கனல்லா உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கேரள பகுதிகளில் இருந்து வரும் லாரிகளில் கோழி, வாத்து,  முட்டை, கால்நடை தீவனங்கள் எடுத்து வரப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்வதோடு அவ்வாறு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மண்டல கால்நடை இணை இயக்குனர் பகவத் சிங் மேற்பார்வையில் நேற்று எல்லைப் பகுதி சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : interview ,Collector ,Nilgiris , Bird flu prevention activities in full swing in the Nilgiris: Collector interview
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...