உடுமலை- மூணார் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகள்: வனத்துறையினர் எச்சரிக்கை

உடுமலை: உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைக் கூட்டம் வாகனங்கள் வழிமறித்ததால் வாகனஓட்டிகள் பீதி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை,அமராவதி வனசரகம் 220 சதுர கி.மீ பரப்பளவு உடையது. இந்த வனத்தில் யானை, கரடி,புலி,சிறுத்தை,காட்டெருமை, புள்ளிமான்,கடமான்,செந்நாய்,உடும்பு மற்றும் பல்வேறு வகையான பாம்புகள்,பறவைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனம் முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் கொசுத் தொல்லை காரணமாக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

உடுமலை வனசரகம் மேற்குபகுதியான வல்ல கொண்டாபுரம், உடுமலை-மூணார் சாலையில் காமனூத்து பள்ளம், ஏழுமலையான் கோயில் பிரிவு ஆகிய பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவில் சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. உடுமலை- மூணார் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருமாநிலத்திற்கிடையே பயணமாகி வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்காமல் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் முகாமிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் 9/6 செக்போஸ்ட் மற்றும் கேரள எல்லையில் உள்ள சின்னார் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் வாகன ஓட்டிகளிலும் மலைவழிப்பாதையில் யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளன. எனவே யானைகளை அச்சுறுத்தவோ, வாகனங்களை விட்டு இறங்கி புகைப்படம் எடுக்கவோ, முகப்பு விளக்குகளை போட்டு அவற்றை அச்சுறுத்தவோ கூடாது என எச்சரித்து அனுப்புகின்றனர். இருப்பினும் காட்டுயானைகள் கூட்டமாக சாலையை மறித்து கொண்டு நிற்கின்றன.

நேற்று முன்தினம் இரவு உடுமலை-மூணார் சாலை காமனூத்து பள்ளம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை மறித்தப்படி நின்றன. இதனால் இரு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் போக்குவரத்து சீரடைந்தது.

Related Stories:

>