×

பொங்கலுக்கு ஒருவாரமே உள்ள நிலையில் பித்தளை, வெண்கல பானைகள் விற்பனை அமோகம்

கோவில்பட்டி:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாத்திரக்கடைகளில் பித்தளை, வெண்கல பானைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் மண்பானைகளில் பொங்கலிடுவது வழக்கமாக இருந்தது. கால சுழற்சியால் இன்றைக்கு கிராமங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் வெண்கலம், பித்தளை பானைகளில் பொங்கலிடுகின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி கொண்டாடப்படுகிறது.பொங்கலுக்கு இன்னமும் 7 நாட்களே உள்ள நிலையில் கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் தெரு, மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார், மாதாங்கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாத்திரக்கடைகளில் வெண்கலம், பித்தளை பானைகள் விற்பனை களைகட்டியுள்ளது.

சென்னை, கும்பகோணம், மதுரை போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் பானைகளை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து, விற்று வருகின்றனர். சுமார் அரை கிலோவில் இருந்து 10 கிலோ அரிசி வேக வைக்கும் அளவுக்கு பல்வேறு வடிவங்களில் கை வேலைப்பாடுகளுடன் கூடிய பளபளக்கும் சில்வர், பித்தளை, வெண்கலம், செம்பு உலோகங்களால் செய்யப்பட்ட பானைகள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பித்தளை பானை எடைக்கேற்ப கிலோ ரூ.700 முதல் ரூ.750 வரைக்கும் வெண்கல பானை கிலோ ரூ.680 வரை விற்கப்படுகிறது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொங்கலுக்கும், சீர்வரிசை கொடுப்பதற்கும் பாத்திர கடைகளுக்கு சென்று வெண்கலம், பித்தளை பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பாத்திரக்கடை உரிமையாளர் முத்துமணி கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ளது. ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு சென்னை, கும்பகோணம், மதுரை போன்ற பகுதியில் தயாரிக்கப்படும் வெண்கலம், பித்தளை பானைகளை கொள்முதல் செய்து விற்கிறோம். இவை தவிர குத்துவிளக்குகள் விற்பனையும் செய்யப்படுகிறது. ஆந்திரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து செம்பு பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் மற்றும் சீர்வரிசை கொடுப்பதற்காகவும் மக்கள் பானை, விளக்கு உள்ளிட்டவைகளை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

Tags : Pongal , With only a week to go to Pongal Sales of brass and bronze pots are on the rise
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா