×

எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு பாராமெடிக்கல் கல்லூரி நிர்வாகி மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார்: போலீஸ் மீது குற்றச்சாட்டு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி மீது, அதில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஆய்வகங்கள், எக்ஸ்ரே, நூலகம் போன்ற வசதிகள் இல்லை. கல்லூரி தாளாளர் மாணவிகளின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார் என தொடர்ச்சியாக புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாக மாணவிகள் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இரணியல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் கடந்த 31.12.2020 அன்று, இந்த கல்லூரி மாணவிகள் 11 பேர் டி.சி, சான்றிதழ் கேட்டு கல்லூரிக்கு சென்றபோது கல்லூரி முதல்வர் ஆன்றோ செல்மர் மற்றும் தலைமை ஆசிரியை செல்வராணி ஆகியோர் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும், கல்வி நிறுவனத்திற்கு அரசு அங்கீகாரம் உள்ளதா? என்று மாணவிகள் கேட்ட போது, அவர்கள் இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கல்லூரியில் மாணவிகளின் குளியல் அறையை எட்டிப்பார்த்ததாகவும் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆன்றோ செல்மர் மற்றும் செல்வராணி மீது இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்ெகாள்ள வில்லை.

இந்த நிலையில், இந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 50 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது எஸ்.பி. பத்ரி நாராயணன், அலுவலகத்தில் இல்லை. ஆனால் எஸ்.பி.யை சந்தித்து மனு அளித்த பின்னரே கலைந்து செல்வோம் என கூறி அவர்கள் எஸ்.பி.
அலுவலகம் முன் காத்திருந்தனர்.  சுமார் 1 மணி நேரம் வரை காத்திருந்து, எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அந்த புகார் மனுவை அளித்திருந்தார். அதில் கல்லூரி முதல்வர், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறி உள்ள மாணவி, இதை யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால், கொலை செய்து விடுவதாகவும், வேறு எங்கும் படிக்க முடியாத வகையில் செய்வோம் என்றும் மிரட்டியதாகவும் கூறி உள்ளார். உயிருக்கு பயந்து இதுவரை வெளியே கூற வில்லை என்றும், தற்போது தான் இதை வெளியே கூறுவதாகவும் கூறி உள்ளார். இந்த புகார் மனு தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாணவிகள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர் சிலர் கூறுகையில், பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை அவர்களை கைது செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. புகார் அளித்த மாணவியிடம், தாங்கள் கூறுவது போல் எழுதி தர வேண்டும் என காவல்துறையினர் கூறி உள்ளனர். இதுவரை எப்.ஐ.ஆர். காப்பியை தர மறுக்கிறார்கள். காவல் நிலையத்தில் விசாரணை நடந்தால், நியாயம் கிடைக்காது. எனவே சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.


Tags : student ,S.P. ,paramedic college administrator , S.P. Another student sexually assaults paramedic college administrator as he rallies in office: Police charged
× RELATED விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி...