×

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வெள்ளி கொலுசு உற்பத்தி மும்முரம்: கைக்கொடுக்கும் நம்பிக்கையில் வியாபாரிகள்

சேலம்:  தமிழகத்தில் சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலத்திற்கு அடுத்தப்படியாக தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கொடி, சந்தனகிண்ணம், குங்குமச்சிமிழ், டம்ளர், வெள்ளித்தட்டு உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர வட மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்பபடுகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், 15ம் தேதி மாட்டு பொங்கலும், 16ம் தேதி உழவர் தினமும்  கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் பெண்கள் புது கால் கொலுசு அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை முன்னிட்டு மதுரை, திருநெல்வேலி, சென்னை, கோவை மற்றும் ஆந்திராவை சேர்ந்த  வெள்ளி வியாபாரிகள், சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கால் கொலுசு கேட்டு அதிகளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர். பொங்கல் ஆர்டர் வந்துள்ளதால், கடந்த சில நாட்களாக சேலம் வெள்ளி தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், இதைதவிர ஆந்திரா வெள்ளி வியாபாரிகள், தமிழக வெள்ளி வியாபாரிகளிடம் ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அடுத்தடுத்து முகூர்த்தம் வருவதால், வெள்ளிப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக லைட் வெயிட் கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் லைட் வெயிட் கொலுசு அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கொடி, வெள்ளிடம்ளர் உற்பத்தி செய்கிறோம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதத்திற்கு மேலாக வியாபாரம் சரிவர இல்லை. பொங்கல் வியாபாரத்தை கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.  பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி 47 ஆயிரத்திற்கு விற்றது. கடந்த ஓராண்டில்  தங்கத்தை போல், வெள்ளி விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பொங்கல் ஆர்டரால் பட்டறைகளில் வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்களை அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். பொங்கல், மாட்டு பொங்கல், கரிநாள் உள்ளிட்ட நாட்களிலும் விற்பனை களைக்கட்டும். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்புவோம். இவ்வாறு வெள்ளி வியாபாரிகள் கூறினர்.

Tags : Pongal ,festival ,Merchants , Pongal As the festival approaches, the production of silver clasp is in full swing: Merchants hoping to lend a hand
× RELATED பங்குனி திருவிழாவில் குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம்