×

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 500 கோழி பண்ணைகள் கண்காணிப்பு: கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

நெல்லை: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உட்பட எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 500 தனியார் கோழி பண்ணைகள் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன. பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அரியானா, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்புப் பணிகளை தமிழக கால்நடைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவிற்கு தமிழகம் அண்டை மாநிலமாகும். கேரளாவில் இருந்து தமிழகத்தில் நுழைய குமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியரை, தேனி மாவட்டம் குமுளி, கோவை- பாலக்காடு எல்லை உட்பட 6 நுழைவு வாயில்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. கேரளாவில் இருந்து வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

நெல்லை, கன்னியாகுமரி, தேனி, கோவை உட்பட கேரளாவின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் 26 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கிருந்து இறைச்சி கோழிகள், முட்டைகள், வாத்துக்கள் தமிழகத்திற்கு கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பறவை காய்ச்சல் தடுப்புப் பணிகளை கால்நடைத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 200 தனியார் கோழி பண்ணைகளும், தென்காசி மாவட்டத்தில் 100 கோழி பண்ணைகளும் தற்போது கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன. புளியரை மற்றும் களியக்காவிளையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பறவை காய்ச்சலை கண்காணிக்க இணை இயக்குநர் முகம்மது காலித் தலைமையில் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் என்பதால், சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இறந்த பறவைகளில் பாக்டீரியாக்கள் மூலம் எச் 5, என் 8 வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், கோழிகள், வாத்துக்கள் வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பறவை காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பறவை காய்ச்சல் கண்ட கோழிகளுக்கு மூக்கில் நீர் ஒழுகும். சளி தென்படுவதோடு, கூட்டம், கூட்டமாக அவை இறந்து போகும். பொதுமக்கள் கோழி இறைச்சியை சாப்பிடும்போது நன்றாக வேக வைத்து சாப்பிடுவது நலம். முட்டைகளையும் நன்றாக வேக வைப்பதே நல்லது’’ என்றனர்.

ஆப்பாயில் வேண்டாமே....
சில நேரங்களில் நோய் பாதித்த கோழி, வாத்து போன்றவற்றை சாப்பிடும்போது மனிதர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து பறவை வளர்ப்பு பண்ணைகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் கோழிகளை வீட்டு எல்லைகளை விட்டு வெளியில் சென்று மேய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, கொக்கு ஆகியவற்றை இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அவற்றிற்கு தீவனம், தண்ணீரை சுத்தமாக தட்டில் வைத்து கொடுக்க வேண்டும்.

வாத்து, வான்கோழி ஆகியவற்றை ஒன்றாக வளர்க்கக்கூடாது. ஆப்பாயில், பச்சை முட்டை ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது நன்றாக வேகவைக்கப்பட்ட ஆம்லெட் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். முழு கோழியை அப்படியே சமைப்பது கூடாது. அரைவேக்காட்டில் சமைத்த கோழிக்கறி, முட்டை ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : bird flu outbreak ,poultry farms ,Kerala Monitoring ,Nellai ,Thoothukudi ,Tenkasi , Echo of bird flu outbreak in Kerala Nellai, Thoothukudi, Tenkasi 500 Poultry Farms Monitoring: Intensity of disinfectant spraying works
× RELATED புரட்டாசி முடிந்ததால் முட்டை விலை...