நெடுஞ்சாலையோரம் நான்கு சக்கர கனரக வாகனங்கள் நிறுத்தக்கூடாது: ஹைவே போலீசார் எச்சரிக்கை

சேலம்: தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் நான்கு சக்கரம், கனரக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று ெநடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தேசிய, மாநில சாலைகள் இருவழிச்சாலையாக இருந்தது. இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளின் வசதிகள் மேம்படுத்தவில்லை. இந்த நிலையில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.இதை பரிசீலித்த மத்திய அரசு கடந்த 1995ம் ஆண்டு காலக்கட்டத்தில் தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தது. இதில் முதல்கட்டமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருந்த இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு, அந்தந்த மாநிலத்தில் முக்கிய தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழியாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் 40 சதவீதம் சாலைகள் நான்கு வழியாக உள்ளது. மீதமுள்ள முக்கிய சாலைகளையும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சேலத்தில் கொண்டாலாம்பட்டியில் மதுரை, பெங்களூர், சென்னை, எர்ணாகுளம் உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக சேலத்தில் எப்போதும் வாகன நெருக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் சமீப காலமாக சேலம் மாவட்டத்தில் லாரி பட்டறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த பட்டறைகளுக்கு பழுது பார்க்க வரும் நான்கு சக்கரம், கனரக வாகனங்கள் சாலையோரம் தான் நிறுத்தப்படுகிறது. இன்னும் சில வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரம் மாதக்கணக்கில் நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. சேலத்தில் குறிப்பாக சீலநாயக்கன்பட்டியில் இருந்து உடையாப்பட்டி பைபாசிலும், சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டி செல்லும் பைபாஸ், அதேபோல் கொண்டலாம்பட்டியில் இருந்து பெங்களூர் செல்லும் பைபாசில் சர்வீஸ் ரோட்டில் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையோரம் தான் நிறுத்தப்படுகிறது.

இதுபோன்ற வாகனங்களால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதாக கடந்த 4ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வௌியிடப்பட்டது. இதையடுத்து சங்ககிரி ெநடுஞ்சாலை போக்குவரத்து போலீசார், ஆர்டிஓ., உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போக்குவரத்து போலீசார் லாரி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் சங்ககிரியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கவும், டிரைவர், வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனத்தின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பிறகு சங்ககிரியில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவது கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் சேலத்திலும் ஒரு சில பகுதிகளில் போலீசார் எடுத்த நடவடிக்கையால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு போலீசார் கூறியதாவது: சாலைகள் வாகனங்கள் செல்வதற்காக மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை பொருத்தமட்டில் நான்கு வழிச்சாலையில் சாலையோரம் 3 அடி நீளத்திற்கு வெள்ளை பெயிண்டால் கோடு இருக்கும். அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்களும், இதற்கு அப்புறம் இரண்டு இடங்களில் வெள்ளை கோடு இருக்கும். அதில் தடுப்புச்சுவரை ஒட்டியுள்ள பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களும், மெதுவாக செல்லும் வாகனங்கள் அதற்கு அடுத்து ஒட்டியுள்ள வெள்ளை கோடு வழியாக செல்ல வேண்டும். இதுதான் நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறையாகும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை.

சாலையோரம் சுமார் 4 அடி முதல் 10 அடி  நீளத்திற்கு மண் பரப்பு இருக்கும். இந்த இடங்களில் தான் சிலர் சாலையோரம் வாகனங்களை நிறுத்துக்கின்றனர். இவ்வாறு சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவது மோட்டார் விதிமுறை மீறுவதாகும். இனிவரும் காலங்களில் வாகன உரிமையாளர்கள், பட்டறைகளில் வாகனங்களை பழுது பார்ப்போர் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவேண்டும். இதை மீறினால் சம்பந்தப்பட்ட வாகனம், பட்டறை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories:

>