மணிமுத்தாறு சாலையில் மிரட்டும் ஒற்றை யானை: வனத்துறை கண்காணிப்பு

அம்பை: மணிமுத்தாறு அருவி சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவிக்கென சிறப்பிடம் உண்டு. குற்றாலத்திற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறு அருவிக்கு அதிகம் கூட்டம் வருவது வாடிக்கை. மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் எப்போதும் கூட்டம் அலைமோதும். சீசன் இல்லாத காலத்தில் சுற்றுலா பயணிகள் நேரடியாகவே மணிமுத்தாறு அருவியை நாடி வருவதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக அருவி பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மணிமுத்தாறு மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, கோதையாறு, குதிரைவெட்டி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. காபி, தேயிலை எஸ்டேட் பகுதிகளான இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அம்பை, நெல்லையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.நேற்று மலைப்பகுதிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வனச்சோதனை சாவடியை கடந்து பஸ் மலைச்சாலையில் செல்லும் போது வழியில் ஒற்றை யானை நின்றிருந்தது. அதனை பார்த்த டிரைவர், பஸ்சை உடனடியாக நிறுத்தினார். சிறிது நேரத்தில் யானை மலையின் மேல் பகுதியை நோக்கி நடந்து சென்றது. சாலை திருப்பமான பகுதியாக இருந்ததால் யானை சென்று விட்டதாக கருதி, டிரைவர் பஸ்சை இயக்கினார். அப்போது சத்தம் கேட்டு மீண்டும் திருப்பி வந்த யானை, துதிக்கையை தூக்கி சத்தம் போட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான டிரைவர், உடனடியாக பஸ்சை ரிவர்ஸ் எடுத்து பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டதை உறுதிபடுத்திய பிறகு பஸ்சை மலைப்பகுதி கிராமத்துக்கு டிரைவர் இயக்கினார். இதனிடையே தகவலறிந்த வனத்துறையினர் ஒற்றை யானை நடமாட்டத்தை ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மணிமுத்தாறு மலைக்கு செல்லும் அரசு பஸ்கள், எஸ்டேட் வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வழியில் வனவிலங்குகளை பார்த்தால் வெகுதொலைவிலேயே வாகனத்தை நிறுத்தும்படியும், ஒலி ஏதும் எழுப்ப வேண்டாம் என்றும், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Related Stories:

>