×

ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் உபரிநீர் அதிக அளவு திறந்ததால் பயிர்கள் சேதம்: முன் அறிவிப்பின்றி திறந்ததால் பாதிப்பு

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே ஏரியின் உபரிநீரை திடீரென்று திறந்ததால், ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்தது. முன் அறிவிப்பின்றி திறந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கானாடு ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீர் மட்டும் நீராதாரம் ஆகும். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கானாடு ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரி முழு கொள்ளளவை எட்டியநிலையில், உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்த கானாடு ஏரிப்பாசன விவசாயிகள் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் வீணாகாமல் இருந்தால், விவசாயத்திற்கு பயன்படும் என எண்ணி, உபநீர் போக்கி (சறுக்கை)யின் மேல் மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரியின் கொள்ளளவை விட கூடுதலாக தண்ணீரை தேக்கியிருந்தனர். இவ்வாறு தண்ணீர் தேங்கியதால், ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ள கண்ணாக்கூர் பகுதியில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதி விவசாயிக்ள பாதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கண்ணாக்கூர் பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகளிடம், கானாடு ஏரியின் உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி வந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை அறந்தாங்கி பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் கானாடு ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என கோரி, காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். கண்ணாக்கூர் கிராமத்தினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பகல் 12 மணியளவில் கண்ணாக்கூர் பகுதி வழியாகச் சென்று, கானாடு ஏரியின் உபரிநீர் போக்கியில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அவசர கால நீர்ப்போக்கியை திறந்துவிட்டனர். கானாடு ஏரியில் கொள்ளளவை விட அதிக தண்ணீர் இருந்ததால், உபரிநீர் போக்கி மற்றும் அவசரகால நீரப்போக்கி வழியாக பல நுhறு கனஅடிதண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது.

அதிகளவு வெளியேறிய தண்ணீர் கானாடு அருகே உள்ள தாழனூர் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு செல்லும் பாலத்தை மூழ்கடித்து சென்றதுடன், அந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புகுந்தது. திடீரென்று அதிக அளவு தண்ணீர் தங்கள் குடியிருப்பை சூழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார், ஒன்றியக்கவுன்சிலர் உதயம்சிவசங்கர், தாழனூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்காமாட்சி, போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் மலையரசன், வைத்திலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே கானாடு ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் தாழனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பை சூழ்ந்ததுடன், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கானாடு கிராமத்தினர் அவசர கால உபரிநீர் போக்கியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் அடைத்தனர். இதைத் தொடர்ந்து குடியிருப்பை சூழ்ந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. பாலம் சேதமடைந்தது.

Tags : lake ,Audyarkov ,opening , Crop damage due to flooding of lake near Audyarkov: damage due to unannounced opening
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!