×

தமிழகத்தில் நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்க கூடாது : ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் முறையீடு!!

மதுரை : நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

கடந்த அக்டோபர் 31ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு

இந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதற்கு தடை கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அடங்கிய அமர்வு ஆகியோர் இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரிக்க தொடங்கியபோது, வழக்கறிஞர்கள் முத்துகுமார், ராம்குமார் ஆஜராகி முறையீட்டை வைத்தனர். அதில், திரையரங்குகளில் 100 சதவீத இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதமானது. திரையரங்குகள் 100% இருக்கையை நிரப்பலாம் என்பது பேரிடர் விதிமுறைகளுக்கும் எதிரானது.100% பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை.  எனவே திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். எங்கள் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்காக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Theaters ,Tamil Nadu ,Lawyers , Tamil Nadu, Theaters, iCourt, Lawyers, Appeal
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...