×

கள்ளக்குறிச்சியில் விடாது பெய்த கனமழை!: வெள்ள நீரில் மூழ்கி 700 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்.. விவசாயிகள் வேதனை..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 700 ஆடுகள் அடித்து செல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் 9 செ.மீ மழை பதிவானதால் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பாவலம் கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் பழனி, கருத்தாப்பிள்ளை, அஞ்சறை ஆகியோரது ஆடுகள் வெள்ளவாரி ஓடை அருகே உள்ள பட்டியில் கட்டப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கரை அருகேயுள்ள ஓடையில் நீர்வரத்து அதிகமானதால் ஏரிக்குள் நீர் புகுந்து வெள்ளவாரி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால் ஓடையின் அருகே கட்டப்பட்டிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

இதில் 200 ஆடுகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. எஞ்சியுள்ள ஆடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு வாய்க்காலில் கரையொதுங்கி பலியானது. மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு ஆடுகள் பலியானது ஆடுகளின் உரிமையாளர்களை மிகுந்த வேதனையடைய செய்துள்ளது. இத்தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை பொய்த்து போனதால் மழை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் கரையோரம் ஆடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் இத்தகைய விபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : Kallakurichi , Counterfeiting, heavy rains, flood waters, 700 goats, casualties
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...