தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்பப் பெற்றது மத்திய அரசு : மக்களின் குரலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என எம்.பி. சு வெங்கடேசன் கருத்து

சென்னை : சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்பப் பெற்ற மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மதுரை - சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. குறைவான பயணிகள் வருகை இருந்ததால் தேஜஸ் ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்திருந்தது. இதனை வன்மையாக கண்டித்த மதுரை எம்.பி. சு வெங்கடேசன்,மதுரை - சென்னை இடையே  இயங்கும் தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என்று ரயில்வேதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், இது கொள்ளைநோய் காலம். மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்கவேண்டிய ஒன்று .இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொள்ளைநோய் காலத்தில் ஏற்புடையது அல்ல. அதுவும் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணம் கோவிட் சார்ந்த அச்சங்களை அதிகம் கொண்டது.அப்படி இருந்தும் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்கு மேல் பயணிகள் வருகை இருப்பதாக அறிகிறோம். எனவே கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை - சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள சு. வெங்கடேசன், மக்களின் குரலுக்கு மாபெரும் வெற்றி.சென்னை-மதுரையிடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் 4ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்ற முடிவினை கைவிட வேண்டுமென கடந்த வாரம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினேன். இதன் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றி🙏🏽, எனத் தெரிவித்துள்ளார்.  

Related Stories: