×

ரவிச்சந்திரனுக்கு பரோல் கோரி தாய் ஐகோர்ட் கிளையில் வழக்கு: உள்துறை முதன்மை செயலர் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் ரவிச்சந்திரன், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக  எனது மகனுக்கு 3 மாத பரோல் கேட்டு அரசிடம் மனு செய்தேன். மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, என் மகனுக்கு நீண்டகால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘இதில் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு தமிழக உள்துறை முதன்மை செயலர், சிறைத்துறை ஏடிஜிபி மற்றும் டிஐஜி, மதுரை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.



Tags : Ravichandran ,branch ,Thai ICC ,Home Secretary , Ravichandran's parole case filed in Thai ICC branch: Home Secretary ordered to reply
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி