×

பலர் தற்கொலை செய்யும் அவல நிலை ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளுக்கு தடைகோரி வழக்கு: ரிசர்வ் வங்கி, கூகுள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, அண்ணா நகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: செல்போன் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வகையில் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இவை செயல்படுகின்றன. இந்த செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சுமார் 50 செயலிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. செல்போன் செயலி மூலம் கடன் வழங்குவோர் அதிகளவிலான வட்டி வசூலிக்கின்றனர்.  கடன் தவணையை முறையாக செலுத்தாதவர்களின் விபரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, செல்போனில் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்கின்றனர். ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளால் இளைஞர்கள் பெருமளவு பாதிக்கின்றனர். இவற்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது முக்கிய பிரச்னையாக உள்ளது. இது வருத்தத்திற்கு உரியது. கடன் வசூலில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை சட்டத்திற்கு உட்பட்டது இல்லை’’ என்றனர்.  பின்னர், மனு குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறை செயலர் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப். 3க்கு தள்ளி வைத்தனர்.

Tags : lenders ,Reserve Bank ,Google , RBI sues Google over ban on online lenders
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு