×

2வது டெஸ்டிலும் அபார வெற்றி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து: முதல் முறையாக நம்பர் 1

கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 176 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில்  தொடரை முழுமையாகக் கைப்பற்றியதுடன் தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியது.ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 238, ஹென்றி நிக்கோல்ஸ் 157, டாரில் மிட்செல் 102* ரன் விளாசினர். இதையடுத்து 362 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய பாக். 3வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று  அந்த அணி நியூசி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 186 ரன்னுக்கு சுருண்டது. ஜாபர் கோஹர், அசார் அலி தலா 37 ரன், பாஹிம் அஷ்ரப் 28 ரன், அபித் அலி 26 ரன் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

நியூசி. தரப்பில் அபாரமாகப் பந்து வீசிய ஜேமிசன் 6 விக்கெட்களை அள்ளினார். போல்ட் 3, வில்லியம்சன் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 176 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசி. அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகனாக கைல் ஜேமிசன், தொடர் நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வாகினர். முன்னதாக நடந்த டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா தகவல்
முதல் இன்னிங்சில் பாக். பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் நியூசி.க்கு உதிரியாக மட்டுமே 64 ரன் கிடைத்தது. ஒரு இன்னிங்சில் அதிக எக்ஸ்ட்ராஸ் கொடுத்த அணிகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 1995ல் தென் ஆப்ரிக்காவுக்கு 64 ரன் அள்ளித் தந்ததால் 7வது இடத்திலும் இருக்கிறது. பெங்களூரில் 2007ல் பாகிஸ்தானுக்கு எதிராக 76 ரன் வாரி வழங்கிய இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

தரவரிசையில் முன்னேற்றம்
நியூசி அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 3வது ஒயிட் வாஷ் வெற்றி இது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி உள்ளது. இந்த 3 வெற்றிகளும் நியூசி. மண்ணில்தான் கிடைத்துள்ளன.  ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டியலில் நியூசிலாந்து முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறும் 6வது அணி நியூசி. ஆகும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை
அணிகள் டாப் 10
ரேங்க்    அணி    புள்ளி
1    நியூசிலாந்து    118
2    ஆஸ்திரேலியா    116
3    இந்தியா    114
4    இங்கிலாந்து    106
5    தென் ஆப்ரிக்கா    96
6    இலங்கை    86
7    பாகிஸ்தான்    82
8    வெஸ்ட் இண்டீஸ்    77
9    ஆப்கானிஸ்தான்    57
10    வங்கதேசம்    55

* பாரத ரத்னா விருது பெறுவதற்கு மிகத் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர் என்றால் அது ஹாக்கி நட்சத்திரம் தியான் சந்த் தான் என்று இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ஜாபர் இக்பால் கூறியுள்ளார்.
* டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : win ,Test , Great win in 2nd Test too: Whitewash Pakistan New Zealand: No. 1 for the first time
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்