×

அடிமையாக இருப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் போட்டிஊழல் செய்வதில் மட்டுமே அதிமுக ஆட்சிக்கு முதலிடம்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

முசிறி: மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி உள்ளது, அதிமுக ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது என்று வேலூரில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், பாலசமுத்திரம், தொட்டியம், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காட்டுப்புத்தூரில் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: காட்டுப்புத்தூரில் 1 கி.மீ தூரத்துக்கு அன்போடு எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததே ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது தெரிந்துவிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவை ஓட, ஓட விரட்டி திமுகவை நாட்டிலேயே 3வது பெரிய கட்சியாக மாற்றிக் காட்டினீர்கள்.

மோடியின் எடுபிடியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். நம்முடைய வரிப்பணத்தில் இருந்து அவரைப் புகழ்ந்து விளம்பரம் கொடுத்துக் கொள்கிறார். ஊழல் செய்வதில் மட்டுமே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மோடிக்கு அடிமையாக இருப்பதில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என எடப்பாடி சொல்கிறார். மோடிக்கு கூஜா தூக்கிக் கொண்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. அவர் மருத்துவமனையில் படுத்தவுடன் 2 அடிமைகளையும் வைத்து நீட் தேர்வை திணித்துவிட்டனர். இதனால் ஆண்டுதோறும் மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக ஆட்சிக்கு வர வேண்டும். முதலமைச்சரில் இருந்து அமைச்சர்கள் வரை பல்வேறு வகையில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளனர். பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகியை சிபிஐ கைது செய்துள்ளது. மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என யாருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட திமுக ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து காடுவெட்டியில் பிற கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைவதற்காக காத்திருந்த ஆயிரம் பெண்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பொதுவாக எதிர்க் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியில் சேருவதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் இங்கு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் நீங்களெல்லாம் இணைவதே ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்பது தெரிந்துவிட்டது என்றார்.


Tags : regime ,AIADMK ,rivalry ,OBS ,Udayanidhi Stalin , AIADMK tops only in OBS and EPS rivalry over slavery: Udayanithi Stalin
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...