×

ஒரு மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை மீண்டும் ஏற்றம்: வரலாறு காணாத உச்சத்தை நெருங்குகிறது: சென்னையில் ஒரு லிட்டர் 86.75

புதுடெல்லி: ஒரு மாதத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தியுள்ளன. இதன் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை நெருங்குகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு கடந்த மே மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை. பின்னர் படிப்படியாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. 82 ரூபாய் அளவில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த மாத தொடக்கத்தில் 86ஐ தாண்டியது. இதேபோல் டீசல் விலை ₹80ஐ நெருங்கியது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசு அதிகரித்து 86.75க்கும், டீசல் லிட்டருக்கு 25 காசு அதிகரித்து லிட்டர் 79.46க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த 2018 அக்டோபரில் பெட்ரோல் 87.33 ஆக இருந்ததே வரலாறு காணாத உச்ச விலையாக கருதப்பட்டது. இந்த உச்ச விலையை மீண்டும் நெருங்கி விட்டது. விலை உயர்வை தவிர்க்க எரிபொருட்கள் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரி விதிப்பால் 1.6 லட்சம் கோடி வசூல்
வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் வந்த விலை உயர்வு கண்கூடாக தெரியவில்லை. அதோடு, வரி ஏற்றம் காரணமாகவே இதற்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் 2 தவணைகளில் கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13, டீசலுக்கு 15 வரி உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசுக்கு சுமார் 1.6 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.


8 மாதத்தில் 14க்கு மேல் எகிறியது
கடந்த  ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதியில் இருந்து ஜூன் 6ம் தேதி வரை 52 நாட்களுக்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுபோல் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி வரை 58 நாட்களுக்கு பெட்ரோல் விலையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை டீசல் விலையும் மாற்றம் செய்யப்படவில்லை. இதுபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதிக்கு பிறகு நேற்றுதான் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 14.8, டீசல் விலை 11.83 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , Petrol, diesel, price
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...