பொள்ளாச்சியில் அதிமுக நிர்வாகி கைதால் திடீர் திருப்பம்: பாஜவின் ரகசிய திட்டம் என்ன?: அமைச்சர்கள் கலக்கம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் பீதியில் உள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பாஜ ஏதோ ரகசிய திட்டத்துடன் செயல்படுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அதிமுக கூட்டணியில்தான் இருப்பதாக தமிழக பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேபோன்று அதிமுக கூட்டணியில்தான் பாஜ இருப்பதாக அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகிறார்கள். அதேநேரம், பாஜ மாநில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை.

இந்நிலையில்தான் பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்து, அரசு விழாவில் பங்கேற்றார். அதில் பங்ேகற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களவை தேர்தலை போன்று வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி தொடரும் என்றனர். ஆனாலும், அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷா தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்கு மீண்டும் சென்று கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாஜ தரப்பில் 60 சீட் தந்தால் கூட்டணி அமைக்கலாம் என்று நிபந்தனை வைக்கப்பட்டதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் 30 முதல் 35 இடங்கள் தருகிறோம் என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா கூறி விட்டு டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி மீது பாஜ அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் பெரிய அளவில் ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக டெல்லி பாஜ தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே, கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வருமான வரி சோதனை அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கு சென்ற இடத்தில், எந்த அதிகாரியும் வெறும் கையோடு திரும்புவதில்லை. பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரின் பின்னணியில் பல்வேறு அமைச்சர்களே பினாமியாக இருந்து செயல்படுவதும், அமைச்சர்களின் முதலீட்டில்தான் இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுவதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற அனைத்து தகவல்களும் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆதாரங்களுடன் உள்ளது. அதனாலேயே தமிழக பாஜ தலைவர்களும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை மிரட்டி வருகிறார்கள். அமைச்சர்கள் பதில் சொல்ல முடியாமல் மழுப்பி வருகிறார்கள்.

கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த பரபரப்பான நிலையில்தான் பொள்ளாச்சியில், பல இளம்பெண்களை மயக்கி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் சிபிஐ 3 பேரை நேற்று அதிரடியாக கைது செய்தது. இதில் பொள்ளாச்சி நகர மாணவர் அணி அதிமுக செயலாளர் அருளானந்தமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவரை இளம்பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ கைது செய்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது முழுக்க முழுக்க பாஜவின் பழிவாங்கும் அரசியல் என்றே கருதப்படுகிறது. அதிமுகவை மிரட்டுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய பாஜ அரசு ஈடுபடுவதாக அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து அதிமுகவை கழட்டிவிட திட்டமிட்டு பாஜ செயல்படுகிறதா, தேர்தலுக்கு முன் அதிமுகவை இரண்டாக உடைக்க பாஜ முயற்சி செய்கிறதா என்ற சந்தேகமும் அதிமுக அமைச்சர்களுக்கு தற்போது எழுந்துள்ளது. காரணம், அமைச்சர்கள் ஊழல் பட்டியல் அனைத்தும் பாஜவிடம் உள்ளது. இதனால் பாஜவுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் எதிர்த்து குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கனவே, கடந்த மக்களவை தேர்தலில் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிமுக குறைந்த அளவிலேயே ஓட்டு வாங்கியுள்ளது. தற்போது, சட்டமன்ற தேர்தல் வர ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில், பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜ ஏதோ ஒரு திட்டத்துடன் தமிழகத்தில் காய் நகர்த்தி வருகிறது என்பது மட்டும் அதிமுக நிர்வாகிகளுக்கு தெரிகிறது. ஆனாலும், எதுவும் செய்ய முடியாமல் அமைச்சர்களும் பீதியில் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல அதிர்ச்சிகளை பாஜ தலைமை அதிமுகவுக்கு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமித்ஷா சென்னை பயணம் திடீர் ரத்து

பாஜ மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகிற 14ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. சென்னை வரும் அவர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக சென்னை வரும் அவர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி தொடர்பாகவும் பேச திட்டமிட்டு இருந்தது. கூட்டணி முடிவாகாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் வாய்ப்பு இருந்தால் மற்ற தலைவர்களை சந்தித்து பேச அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணம் நேற்றிரவு திடீரென ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>