சேமிப்பு கிடங்கில் ஆய்வு: மாவட்ட அளவில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தடுப்பூசி சேமித்து வைக்க இந்தியா முழுவதும் 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த கிடங்கை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று காலை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி : போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 8ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. மாவட்டங்களில் 51 குளிர்சாதன அறைகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், அதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசிகள் எப்போது வந்தாலும் அதை அடுத்த நாள் முதலே செலுத்த தயார் நிலையில் உள்ளோம். 2,850 இடங்களில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளன. 2 கோடி தடுப்பூசிகளை சேமிக்கும் அளவு இந்த கிடங்குகளில் வசதியுள்ளது, ஆனால் மத்திய அரசின் தொகுப்பு எவ்வளவு வரும் என்பதைப் பொறுத்தே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்றும், நாளையும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் தமிழகத்திற்கு எப்போது தடுப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>