சிபிஐ வசமிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: சுரானா நிறுவனத்தில் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் நேரில் விசாரணை: லாக்கரை தடயவியல் துறை ஆய்வு செய்ய திட்டம்

சென்னை: சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், ஐஜி சங்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்திலேயே உள்ள லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. பின்னர் தங்கம் வைக்கப்பட்ட லாக்கர்களின் 72 சாவிகளும் அதிகாரிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே சுரானா நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் கடனாக வாங்கிய ரூ.1,160 கோடியை திரும்ப செலுத்தாமல் இருந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து வங்கிகளின் கடன்களை அடைக்க உத்தரவிட்டது.

அதன்படி சீல் வைக்கப்பட்ட சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை மாயமாகி இருந்தது. அதைதொடர்ந்து, சிபிஐ வசமிருந்து மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் மாயமான 103 கிலோ தங்கம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி டிஜிபி பிரதீப் பிலிப் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் ஐபிசி 380(திருட்டு) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ேநற்று சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் மற்றும் ஐஜி சங்கர் ஆகியோர் சுரானா நிறுவனத்தில் தங்கம் மாயமான லாக்கரை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து ஓரிரு நாளில் தங்கம் மாயமான லாக்கரை தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் நிருபர்களிடம் கூறியதாவது: வரலாற்றில் முக்கியமான வழக்கு. விசாரணை பற்றி தற்போது வெளியிடமுடியாது. எனது தலைமையில் ஐஜி சங்கர், தென் மண்டல எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பிக்கள் கண்ணன், சத்தியசீலன் ஆகியோர் விசாரணை நடத்தினோம். உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவோம். வழக்கின் விசாரணை தற்போது ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்துவோம். நீதிமன்றம் எங்களுக்கு 6 மாதக்கால அவகாசம் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>