×

2 ஆண்டுக்கு பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம்: அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை: விஐபிக்களின் மகன்களுக்கு சிக்கல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பலரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே, முக்கிய பிரமுகர்கள் மகன்கள் உள்பட மேலும் பலர் கைதாகலாம் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவி கடந்த 2019 பிப்ரவரி 24ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தன்னை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.  அதன்பேரில், 2019 மார்ச் 3ம் தேதி, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்சியர் திருநாவுக்கரசு (26), அவரது நண்பர்கள் ஜோதிநகரை சேர்ந்த சபரிராஜன் (25), சூளேஸ்வரன்பட்டி பூங்காநகரை சேர்ந்த சதீஸ் (29), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆச்சிப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் (28) என்பவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். இவர்கள், அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ), 354 (பி) உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான நபர்கள், பல இளம்பெண்களை ஆசைவார்த்தை கூறி, ஆனைமலை அருகே உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை வீடியோ எடுத்து மிரட்டியதும் பூதாகரமாக வெடித்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் பல வி.ஐ.பி.க்களின் மகன்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தமிழக போலீசார் காப்பாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, அ.தி.மு.க.வில் இளைஞர் அணி உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு உண்மைகளை மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோைவ சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 5 பேரும், பாதுகாப்பு கருதி சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று அதிகாலை, பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த நகர அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (34), வி.கே.வி. லே-அவுட்டை சேர்ந்த பாபு (27), ஆச்சிப்பட்டியை சேர்ந்த ஹெரான்பால் (29) ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள், அனைவரும் குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இவர்கள் மூவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 376டி (கூட்டு பலாத்காரம்), 354 (பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை), 392 (பொருட்களை களவாடுதல்) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் சிபிஐ வழக்கு பதிவுசெய்துள்ளது. கைதான 3 பேரும் நேற்று காலை கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் ஈரோடு மாவட்டம் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி, கோவை சிறையில் அடைக்கப்படவில்லை.
தமிழகத்தையே உலுக்கிய, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார்? அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள் யாரும் உள்ளார்களா? எனவும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணையை துவங்கியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் அ.தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து வி.ஐ.பி.க்களுடனும் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அருளானந்தத்திற்கு மட்டும் தொடர்பு உண்டா? அல்லது வி.ஐ.பி.க்களுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

புதுமாப்பிள்ளை
கைதான அருளானந்தத்திற்கு அ.தி.மு.க. மட்டுமின்றி, பா.ஜ. வட்டாரத்திலும் நெருங்கிய நட்பு இருப்பதாக தெரிகிறது. பொள்ளாச்சி நகரில் சில டாஸ்மாக் ‘பார்’ இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர், அடிக்கடி சென்னை சென்று, கோட்டையில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை சந்தித்து பேசுவதும், அதை பேஸ்புக்கில் பதிவிடுவதும் வழக்கம். பல அரசியல் தலைவர்களுடன் அருளானந்தம் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர். தற்போது, அருளானந்தம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை சி.பி.ஐ. முடக்கியுள்ளது. அருளானந்தத்துக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடந்தது. இவர் கைதானது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டு தாமதம் ஏன்?
இரண்டு ஆண்டு தாமதத்திற்கு பின்னர் இப்போது 3 பேர் கைது செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில், 3 பேரும் கைது என்ற தகவலை சி.பி.ஐ. வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 3 பெண்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது என்று மட்டுமே சி.பி.ஐ. கூறியுள்ளது. ஆனால் 2 ஆண்டு தாமதம் ஏன்? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

3 பேருக்கும் என்ன தொடர்பு?
தற்போது கைதான 3 பேரும் பாலியல் பலாத்கார வீடியோ எடுத்துள்ளனர். ஆனால், இவர்கள் இருக்கும் வீடியோ வெளியாகவில்லை. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் இளம்பெண்களை வசியப்படுத்தி ஏமாற்றி பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த பெண்களை மிரட்டி அடிக்கடி வரவழைத்து அருளானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகள் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. சி.பி.ஐ. போலீசார், கூட்டு பலாத்கார பிரிவில் 3 பேரையும் சேர்த்துள்ளனர். அருளானந்தம் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்த நபர்களின் பண்ணை வீட்டிற்கு சென்று, பெண்களை பலாத்காரம் செய்தாரா? எனவும் விசாரணை நடக்கிறது.

அடுத்து சிக்குவது யார்?
இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் அருளானந்தம் முக்கிய குற்றவாளி என தெரிகிறது. திருநாவுக்கரசை கைது செய்த உடன் இவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், இவர் அரசியல் பின்புல அதிகாரத்தில் இருந்த காரணத்தால் தப்பிவிட்டார். இவர், தனது நண்பர்கள் ஹேரன்பால், பாபு ஆகியோரையும் காப்பாற்றியுள்ளார்.

இந்த வழக்கில் பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, சென்னையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் என தெரிகிறது. இவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் ஒருவரும், பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய வி.ஐ.பி. ஒருவரும் துணையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் மகன்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அடுத்து யார், எப்போது, எந்த நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்? என தெரியாத நிலை இருக்கிறது. பல முக்கிய புள்ளிகள் தங்களது வாரிசுகளை காப்பாற்ற திரைமறைவில் காய் நகர்த்தி வருவதும் தெரியவந்துள்ளது.

கட்சியில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், கட்சியின் கொள்கை, குறிக்ேகாள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் நகர மாணவர் அணி செயலாளர் உள்பட கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. மகளிர் அணி, மாதர் சங்கத்தினர் முற்றுகை
கைதான மூவரும் கோவை மகிளா கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் வாயில் முன்பு திரண்டனர். அங்கேயே அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர். போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், 30 பேரும் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு, கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் கோர்ட் வாயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, பட்டதாரி இளம்பெண், இல்லத்தரசி என 3 பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது. கைதான மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ‘‘உங்களை எதற்காக கைது செய்துள்ளனர் தெரியுமா?’ என நீதிபதி நந்தினிதேவி கேட்டார். அதற்கு, மூவரும் ‘‘தெரியாது’ என்றனர். உடனே நீதிபதி, ‘‘கிரே கலர் காரில், பெண்களை சபரிராஜன் (எ) ரிஷ்வந்த் வீட்டுக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அதன்பேரில் கைது செய்துள்ளனர்’’ என்றார். இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மிக விைரவில் இதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. போலீசார் கூறினர்.

Tags : Pollachi ,AIADMK ,CBI ,sons ,VIPs , Pollachi, ABUSE case, AIADMK leader, arrested
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!