வடகிழக்கு டெல்லி கலவரம் கெஜ்ரிவாலுக்கு பிருந்தா காரத் கடிதம்: கெஜ்ரிவாலுக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுடெல்லி: தேசிய குடியுருமை திருத்த சட்டத்துக்கு(சிஏஏ) எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வகுப்புக்கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  

இந்நிலையில், இந்த கலவரத்தில் பலியான வயது வந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சமும், சிறுவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். ஆனால், இந்த இழப்பீடு தொகை வழங்குவதில் பாகுபாடு பார்க்கக்கூடாது என சிபிஐ(எம்) கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லி கலவரத்தில் பலியான சிறுவர்கள் நிதின் பாஸ்வான்(15) மற்றும் அமீன்(17) ஆகிய இருவரும் அந்தந்த குடும்பங்களின் வருவாய்க்கு உதவி வந்த நிலையில் கலவரத்தில் சிக்கி பலியாகினர். இவர்களது குடும்பத்தினரை காரத் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இழப்பீடு வழங்குவதில் உள்ள இந்த பாகுபாடுகுறித்து காரத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, இதுகுறித்து காரத் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தினார்.

முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: கலவரத்தில் பலியான குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும். இழப்பீடுகள் வழங்க குடும்பத்தில் சம்பாதிக்கும் வயது வந்த நபருக்கு மட்டுமே அதிகபட்ச தொகை வழங்க வேண்டும் என்கிற பழைய விதிகளை பின்பற்றுவதால் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது. உண்மையில், டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கு சென்றாலும் கூட மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது தந்தையுடன் இணைந்து குடும்ப தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் குடும்ப வருமானத்திற்காக அந்த சிறுவர்கள் உழைத்தனர். இவர்களை இழந்ததால் அந்த குடும்பத்தினரின் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வயது வந்தவர்கள் சிறுவர்கள் என பாகுபாடு காட்டால் அனைவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>