×

சட்டப்பேரவை கமிட்டியின் தலைவர் அடிசிக்கு பதிலடி டெல்லியில் புழுதிமாசு அதிகரிப்புக்கு பொதுப்பணித்துறைதான் காரணம்: வடக்கு மாநகராட்சி மேயர் பதில் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் புழுதிமாசு மற்றும் காற்று மாசுபாட்டிற்கு டெல்லி அரசின் பொதுப்பணித் துறை மற்றும் குடிநீர் வாரியமே பொறுப்பு என வடக்கு டெல்லி மேயர் ஜெய் பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜ ஆளும் மாநகாட்சி நிர்வாகத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. பரஸ்பரம் இரு தரப்பும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். டெல்லியில் புழுதி அதிகரிக்க மாநகராட்சிகள் தான் காரணம் என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியபோதிலும், டெல்லியிலுள்ள மாநகராட்சி நிர்வாகங்கள் இயந்திரங்களை கொண்டு சாலைகளை துப்பரவு செய்யும் பணிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்று சட்டப்பேரவை சுற்றுச்சூழல் கமிட்டி குற்றம்சாட்டியிருந்தது.

மேலும், டெல்லியில் புழுதி மாசுபாடு அதிகரித்துள்ளது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி, பாஜ தலைமையிலான மூன்று மாநகராட்சிகளின் கமிஷனர்களுக்கு டெல்லி சட்டப்பேரவையின் சுற்றுச்சூழல் கமிட்டி சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இதன்படி, கடந்த திங்களன்று மூன்று மாநகராட்சிகளின் கமிஷனர்கள் கமிட்டியின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, கமிட்டியின் தலைவர் அடிசி பல்வேறு கேள்விகளை  எழுப்பி விளக்கம் கேட்டார்.
இதுபற்றி அடிசி பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கையில், டெல்லி மாசுபாட்டுக்கு சாலை புழுதி முக்கிய காரணமாகும்.

இதுவரை சாலைகளை இயந்திரங்களை கொண்டு துப்பரவு செய்யும் பணிகளை மாநகராட்சிகள் மேற்கொள்ளததற்கு என்ன காரணம் என்பது பற்றியும், தங்களது எல்லைக்குள் இயந்திர துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சாலைகளின் தூரம் எவ்வளவு என்கிற எந்தவித புள்ளிவிவரமும் அவர்களிடம் இல்லை. இது அதிர்ச்சியளிக்கிறது. நிலைமை இப்படி இருந்தால் அவர்களால் எப்படி புழுதியை கட்டுப்படுத்த இயலும்? என குற்றம்சாட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது, டெல்லியில் புழுதிமாசு அதிகரிக்க டெல்லி அரசின் பொதுப்பணித்துறையும், குடிநீர் வாரியமும் தான் காரணம் என வடக்கு டெல்லி மேயர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி மேயர் ஜெய் பிரகாஷ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டெல்லி அரசின் கீழ் உள்ள பொதுப்பணித்துறையும், குடிநீர் வாரியமும் தான் நகரின் பல்வேறு இடங்களை தோண்டிபோட்டுள்ளனர். இதுபோன்று பொதுப்பணித்துறையின் எல்லைக்குள் குவிக்கப்பட்டுள்ள கற்குவியல்களை வடக்கு மாநகராட்சி தான் அகற்றி வருகிறது. இதனால் புழுதி பறந்து காற்றுமாசுபடுகிறது. டெல்லியின் பொதுப்பணித் துறையோ அல்லது டெல்லி குடிநீர் வாரியமோ என்டிஎம்சி மேற்கொண்ட வேலை அல்லது அவர்களின் அதிகார வரம்பில் செய்யப்பட்ட பணிகளுக்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காகவும் எந்த நிதியும் வழங்கவில்லை. இந்த இரு துறைகளும் குறைந்தபட்சம் அவர்களின எல்லைக்குள் குவிக்கப்பட்ட “மால்பா”வை கூட அகற்றவில்லை. இதன் காரணமாகவும் புழுதிமாசு உருவாகி காற்றுமாசு அதிகரித்தது. இவ்வாறு மேயர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

Tags : Public Works Department ,Aditya ,Delhi ,Legislative Committee , Public Works Department is responsible for the increase in dust pollution in Delhi in retaliation for the Chairman of the Legislative Committee: Northern Corporation Mayor
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்