×

ஐஎச்பிஏஎஸ் இயக்குநர் பணி பிரச்னை ஆம்ஆத்மி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு 2ம் அலை உச்சத்தில் இருந்தபோது, நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி ஐஎச்பிஏஎஸ்சில் தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அந்நிறுவன இயக்குநர் என் ஜி தேசாய். அவருக்கு கடந்த அக்டோபரில் 65 வயது முடிவடைந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்து ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. பதவி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரியும், அக்டோபருக்குப் பின் தேசாய் பிறப்பித்த உத்தரவுகளை செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் ஐஎச்பிஏஎஸ் முன்னாள் அதிகாரி தேஜ் பகதூர் சிங் என்பவர் முறையீடு செய்தார்.

முறையீட்டு மனுவில், 2012ம் ஆண்டு தனது 62 வயதில் ஓய்வு பெற்றதாகவும், அப்போது பதவி நீட்டிப்பு கோரிய தனக்கு, ஓய்வு வயதை எட்டியதால் அரசு விதிகள்படி அவ்வாறு அளிக்க முடியாது எனவும் அரசு கூறியது. தேசாய்க்கு இயக்குநர் பதவியை 2016ல் வழங்கிய போது, பதவி காலத்திற்குள் 65 வயது முடிவடைந்தால், ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி ஓய்வு பெற்ற அவருக்கு, உடனடியாக பதவி நீட்டிப்பு செய்துள்ளது ஆம் ஆத்மி அரசு. எனக்கு ஒரு நியாயம். அவருக்கு ஒரு நியாயமா என குமுறல் தெரிவித்து இருந்தார். அந்த முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர், மனுதாரரின் புகாருக்கு பதில் அளிக்கும்படி டெல்லி அரசு மற்றும் ஐஎச்பிஏஎஸ் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். விசாரணை தொடர்ச்சி 29ல் நடைபெறும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags : IHBAS ,Government , IHBAS Director Job Problem ICC Notice to Aam Aadmi Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...