டெல்லி சைபர் செல்லில் புகார் சமூக வலைதளங்களில் நட்பு ஏற்படுத்தி மிரட்டி பணம் பறிப்பு: 6 பேர் கும்பல் ராஜஸ்தானில் சிக்கினர்

புதுடெல்லி: சமூக வலைதளங்கள் மூலமாக நட்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அவர்களின் வீடியோ கால்களை பதிவு செய்து அவற்றை ஆபாச படங்கள், உரையாடல்களுடன் இணைத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக ஊடங்களில் போலி கணக்குகளை உருவாக்கி அதன்மூலம் முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் சிலர் நட்பை ஏற்படுத்திக்கொள்வர். பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து டெல்லி சைபர் செல் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்மந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண் மற்றும் மிரட்டிலுக்கு பயன்படுத்திய பேஸ்புக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் அம்மாநில போலீசாரின் உதவியுடன் ராஜஸ்தான் மாநிலத்தின் பாராத்பூர் பகுதியிலிருந்து 6பேரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதுபற்றி டெல்லி சைபர் கிரைம் துணை கமிஷனர் அன்யேஷ் ராய்  கூறியதாவது: பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த வாரிஸ் (28), ரெய்ஸ் (22), அன்னே கான் (21), வாஹித் (23), முபீத் (30) மற்றும் அக்ரம் (21) ஆகியோரை கைது செய்தோம். இந்த கும்பல் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதங்களில் போலி  கணக்குகளை உருவாக்குவர். பின்னர் அதன்மூலம் பிரண்ட் அழைப்பு அனுப்புவர். நட்பை ஏற்றுக்கொள்பவர்களிடம் துவக்கத்தில் மிகவும் ஜாலியாகவும் அன்பாகவும் பழகத்தொடங்குவர். பின்னர் அவர்களிடம் பேசுவதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்வர்.

அந்த வீடியோக்களை கொண்டு ஆபாச படங்கள் மற்றும் உரையாடல்களை மார்பிங் செய்து சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டுவர். பயந்து ஒடுங்கும் நபர்களிடம் பணம் கேட்டு மிரட்டத்தொடங்குவர். இதுபோன்று ரூ.2,000 முதல் ரூ.30,000 வரை கேட்டு பெறுவர். சுமார் ரூ.25 லட்சம் வரை இதுபோன்று பணம் பறித்துள்ளனர். இந்த மோசடிக்கு பயன்படுத்திய 17 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளும் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறும் பணத்தை பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி அவற்றை பின்னர் ராஜஸ்தான்மாநிலம் அல்வார் பகுதியிலுள்ள வங்கிக்கிளை ஒன்றுக்கு மாற்றிக்கொள்வர். இதுபோன்று 10 வங்கி கணக்குகள் 2  ஏடிஎம் அட்டைகள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றை முடக்கி உள்ளோம். டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கும்பல் மீது சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறினார். இதுபோன்று ரூ.2,000 முதல் ரூ.30,000 வரை கேட்டு பெறுவர். சுமார் ரூ.25 லட்சம் வரை இதுபோன்று பணம் பறித்துள்ளனர்.

Related Stories:

>