×

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்: கடந்த ஆண்டைவிட 20% குறைவாக இயக்கம்?...விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறைவான பஸ்களை இயக்க அதிகாரிகள்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது, அதன்பிறகே எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.

தமிழகத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அப்போது பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் செலவிடுவார்கள். குறிப்பாக  சென்னையிலிருந்து அதிகமான மக்கள் செல்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்தவகையில் நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகையானது வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் முதல் விருப்பமாக ரயில் பயணமே இருப்பதால், அதில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இதேபோல் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே  துவங்கிவிட்டது. இதிலும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.ஆனால் முந்தைய ஆண்டுகளைப்போல் இல்லாமல் நடப்பு ஆண்டில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு கொரோனா  பரவல் காரணமாக ஐடி நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் போன்றவை முடக்கநிலையிலேயே இருப்பது தான் காரணம்.

இச்சூழ்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் 25,000 பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து  போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று  தலைமைச்செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பஸ்ஸ்டாண்டுகளை பிரித்து பஸ்களை இயக்குவது. தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக எத்தனை எம்டிசி பஸ்களை  இயக்க வேண்டும். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு அதிகப்படியான பயணிகள் வருவார்கள் என்பதால், அங்கு எந்த எந்த இடங்களில் அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும்.

முன்பதிவு மையங்கள் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் எத்தனை பஸ்கள் நடப்பாண்டில் இயக்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 30 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 80 சதவீதம் பஸ்களை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு கொரோனா காரணமாக ஐடி நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் போன்றவை செயல்படாததால் குறைவான பயணிகளே முன்பதிவு  செய்துள்ளனர். இதனைக்கருத்தில் கொண்டு இவ்வாறு இயக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு வசதியாக தயார் நிலையில் எத்தனை பேருந்துகளை வைக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களது முடிவுகளை போக்குவரத்துத்துறை  அமைச்சரிடம் தெரிவித்த பிறகு, அவர் இறுதி முடிவு எடுப்பார். அதன்பிறகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : festival ,Pongal ,announcement , Special bus for Pongal festival: 20% less movement than last year? ... Official announcement soon
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா