×

10, பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு?.. வழிகாட்டுதல்களை வழங்கியது பள்ளிக்கல்வித்துறை

வேலூர்: கர்நாடகவை பின்பற்றி பொங்கல் விடுமுறைக்கு பின்னர், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கமும் குறைந்துள்ளது. இதனால் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பரில் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அதேபோல் நீட் தேர்வை தொடர்ந்து வாரியத்தேர்வுகளும் நடந்து வருகிறது.

ஆனால், பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 10, பியூசி வகுப்புகளுக்கு பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதல் கட்டமாக, பள்ளிகளை திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இன்று தொடங்கி 8ம்தேதி வரை பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வாரத்தில், 6 நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப மாணவர்களை பல குழுக்களாக பிரித்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள், ‘ஆன்லைன்’’ வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பினால், அனுமதிக்க வேண்டும். தனியார் பள்ளிகள், பள்ளி கல்வி அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று, பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளுக்கு வர, பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் அவசியம். வருகைப்பதிவு கட்டாயமில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர், முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம், சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ‘பயோமெட்ரிக்’’ வருகைப்பதிவை, தற்போது பயன்படுத்த வேண்டாம். பள்ளி வளாகத்தை, கொரோனா தொற்று தடுப்பு முறைப்படி, ‘சானிடைசர்’’ பயன்படுத்தி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  அவசர உதவி, மருத்துவ உதவி, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் தொலைபேசி எண் மற்றும் விபரங்களை, பள்ளிகளில் பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்கள் வரவும், வெளியேறவும், ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்களை ஏற்பாடு செய்ய வேண்டும். வானிலை சரியாக இருந்தால், திறந்தவெளியில், மரத்தடிகளில் வகுப்புகளை நடத்தலாம். விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது அனுமதியில்லை. விளையாட்டு, மைதானங்களில், கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : schools ,Department of School Education , Decided to open schools for 10, plus 2 classes only? .. Guidelines issued by the Department of School Education
× RELATED 24 முதல் 26ம் தேதி வரை செயல்படும் பள்ளிகளுக்கு 26ம் தேதி கடைசி பணிநாள்