நாயை அடித்து துன்புறுத்திய விவகாரம்: உங்கள் மேல் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பாயும்...தொழிலதிபரை மிரட்டிய பாஜக மாஜி அமைச்சர்

பெங்களூரு:பெங்களூருவில் நாயை அடித்து துன்புறுத்திய தொழிலதிபரை பாஜக முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி மிரட்டிய ஆடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் 4.54 நிமிட ஆடியோ கிளிப் ஒன்று  வைரலாகி வருகிறது. அதில், சுல்தான்பூர் பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியும், கர்நாடக மாநிலம் பெங்களூரு தொழிலதிபர் ராமலிங்கம் என்பவரும் பேசிக் கொள்ளும் உரையாடல் தான் என்பது உறுதியாகி  உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் ராமலிங்கத்தின் மகளை அவரது வளர்ப்பு நாய் ஒன்று கடித்துவிட்டது.

அதையடுத்து அந்த நாயை ராமலிங்கம் அடித்து துன்புறுத்தி காயப்படுத்தி உள்ளார். அதனை பார்த்த அண்டை வீட்டாரான நிதின் மற்றும் அவரது நண்பரும் விலங்கின ஆர்வலருமான மாலதி ஆகியோர் ராமலிங்கத்தை கண்டித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராமலிங்கம் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிதினும், மாலதியும் முன்னாள் அமைச்சர் மேனகா  காந்தியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர்  பேசிய ஆடியோவில்,  ‘நாய்களையோ அல்லது விலங்குகளையோ மீண்டும் தாக்கினால், அவர் மீது பாலியல்துன்புறுத்தல் புகார் கொடுங்கள்’ என்று பேசியுள்ளார்.

அதன்பின் ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய மேனகா காந்தி, ‘நான் உங்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகாரை கொடுக்க சொல்வேன். நீங்கள் மாலதியை துன்புறுத்தி உள்ளீர். நிதினையும் மிரட்டி உள்ளீர். உள்ளூரில் உங்களை  குண்டர் என்கின்றனர். நீங்கள் ஒரு மட்டையால் நாயை அடித்து துன்புறுத்தி உள்ளீர். நீங்கள் பாதி நேரம் குடிபோதையில்தான் இருப்பதாக கூறுகின்றனர்’ என்று பேசினார். அப்போது, மேனகா காந்தி கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்த  ராமலிங்கம், அவரின் அச்சுறுத்தல் பேச்சால் தயக்கத்துடன் ஆடியோவில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோதான் இப்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையே ராமலிங்கம் மற்றும் விலங்கு ஆர்வலர் மாலதி மற்றும் நிதின் ஆகியோருக்கு  எதிராக கடந்த 2ம் தேதி ஹை கிரவுண்ட்ஸ் காவல்துறை வழக்குபதிவு செய்ததாக துணை  போலீஸ் கமிஷனர் (மத்திய  துணைப்பிரிவு) எம்.என்.அனுசட் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘முன்னாள் மத்திய அமைச்சர் பேசிய ஆடியோ குறித்த புகார் ஏதும் வரவில்லை. யாராவது புகார் அளித்தால், நாங்கள்  நடவடிக்கை எடுப்போம்’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக ராமலிங்கத்தை தொடர்பு கொண்ட போது, அவர் அவரது செல்போனை சுவிட்ஜ் ஆப் செய்துவிட்டார். இருந்தும், ஆடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் ஆய்வு செய்து  வருகின்றனர்.

Related Stories:

>