×

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் 2வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. கோஹ்லி இல்லாத நிலையில் ரகானே மெல்போர்னில் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஜடேஜா அரைசதம் அடித்து வலு சேர்த்தார். மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி தொடர்ந்து தடுமாறி வருகின்றனர்.

ரோகித்சர்மா வருகை பேட்டிங்கில் வலு சேர்க்கிறது. விகாரிக்கு பதிலாக அவர் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என தெரிகிறது. ஒருவேளை தொடர்ந்து சொதப்பும் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டால் ரோகித்சர்மா தொடக்க வீரராக ஆட வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சில் பும்ரா, அஸ்வின் பார்மில் உள்ளனர். முதல் டெஸ்ட்டிலேயே சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் காயத்தால் விலகிய நிலையில், சைனி, தாகூர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சேர்க்கபடலாம். நடராஜன் யார்க்கர் சிறப்பாக வீசினாலும் 130 கி.மீட்டர் வேகம் தான் உள்ளது. இதனால் சைனி அல்லது தாகூருக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் வார்னர் வருகையால் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது. புதுமுக வீரர் புகோவ்ஸ்கி காயத்தில் இருந்து மீண்டுள்ளார். வார்னருடன் இவர் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். இதனால் மேத்யூ வேட் கழற்றி விடப்படுகிறார். ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆப் பார்மில் உள்ளார். டிராவிஸ் ஹெட்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்துவீச்சில் எந்தவித மாற்றமும் இருக்காது என தெரிகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

சிட்னி மைதானத்தில் இதுவரை....

 ஆஸ்திரேலியாவில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் ஒரே மைதானம் சிட்னி தான். இங்கு ஆஸ்திரேலிய அணி 108 டெஸ்டில் விளையாடி 60ல் வெற்றியும், 28ல் தோல்வியும், 20ல் டிராவும் கண்டுள்ளது. இந்தியா 12 டெஸ்ட்டில் ஆடி ஒரு வெற்றி, 5 தோல்வி, 6 டிரா கண்டுள்ளது. இந்தியாவின் ஒரே வெற்றி 1978ல் ஆண்டு பிஷன்சிங்பேடி கேப்டனாக இருந்தபோது கிடைத்தது. அதன்பின் 42 ஆண்டுகளாக இங்கு இந்தியா  வென்றதில்லை. 2004ம் ஆண்டு இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 705 ரன் குவித்து டிக்ளேர் செய்தது தான் அதிகபட்சம். ஆஸ்திரேலியா 2012ல் 4 விக்கெட் இழப்பிற்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது தான் அதிகம்.


Tags : Test ,India ,Australia , The 3rd Test between India and Australia starts tomorrow
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!