சூரப்பா மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலை. மறைக்கிறது!: நீதிபதி கலையரசன் ஆணையம் அதிருப்தி..!!

சென்னை: சூரப்பா மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் மறைக்கிறது என்று நீதிபதி கலையரசன் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் மீது ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் சொல்ல விரும்புவோர் இ - மெயில் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் மறைக்கிறது என்கின்ற குற்றசாட்டை நீதிபதி கலையரசன் ஆணையம் முன்வைத்திருக்கிறது.

ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இதற்காக சென்னை பொதிகை இல்லத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு கட்டுபாட்டு அலுவலர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர் மீது புகார் அளித்த நபர்களையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சூரப்பா மீது விசாரணை குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

கேட்கின்ற ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் தர மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்கு முன்னதாகவே அரசிடம் கலையரசன் ஆணையம் சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>