கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு சீன அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : உலக சுகாதார நிறுவனம்!!

ஜெனீவா : கொரோனா குறித்து ஆராய வூகான் செல்லவிருந்த உலக சுகாதார குழுவை அனுமதிக்க சீனா மறுப்பது ஏமாற்றமளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவி, இன்று உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்தது. இந்த சிறப்புக்குழு உகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  குறித்து ஆராய மூத்த மருத்துவ விஞ்ஞானி பீட்டர் பென் எம்பரேக் (Peter Ben Embarek) தலைமையில், பல நாடுகளை சேர்ந்த 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளோம். இந்த மாதம் அவர்கள் வூகானுக்கு செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி இதுவரை சீனாவிடம் இருந்து கிடைக்கவில்லை.சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.இந்த 10 பேரில் சீனாவுக்கு புறப்பட்ட இரண்டு பேரில் ஒருவரை சீனா திருப்பி அனுப்பி விட்டது. மற்றவருக்கும் அனுமதி கிடைக்காததால் அவர் தற்காலிகமாக வேறு ஒரு நாட்டில் தங்கி உள்ளார்.    

Related Stories:

>