×

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் 2வது அலை வீசும் என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், நிலோபர்கபில் உள்ளிட்டோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.இதேபோன்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு எம்பி, எம்எல்ஏக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,Kamaraj ,hospital ,Tamil Nadu , Minister of Food, Kamaraj, Corona
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...